சத்தமின்றி நீக்கப்பட்ட தேசியமயமாக்கல் சட்டம்
புதுதில்லி, அக். 6 - பிபிசிஎல் எனப்படும் பாரத் பெட் ரோலியம் நிறுவனத்தை தனியார்மய மாக்க வசதியாக, அந்நிறுவனத்தை தேசியமயமாக்கும் பொருட்டு 1976ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை கடந்த 2016ம் ஆண்டிலேயே மத்திய அரசு சத்தமில்லாமல் நீக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங் களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 15 ஆயிரத்து 78 பெட்ரோல் விற்பனை நிலையங்களும், 6 ஆயிரத்து 4 சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களும் உள்ளனர். மும்பை, கொச்சி உள்ளிட்ட 4 இடங்களில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளும் உள்ளன. இந்த ஆலைகள் மூலம் 38.3 மில்லியன் டன் கச்சா எண்ணெயை எரிபொருளாக உற்பத்தி செய்ய முடியும்.
ஆங்கிலேயர்களின் காலனி யாதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்த போது, 1920ம் ஆண்டுகளில் பர்மா செல் (Burmah Shell)எனும் பெயரில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1976ம் ஆண்டில் வெளிநாட்டினருக்கான எண்ணெய் நிறுவனங்களை தேசிய மயமாக்க கொண்டு வரப்பட்ட சட்டத் தின்கீழ், இந்நிறுவனம் தேசியமய மாக்கப்பட்டது. இந்நிலையில், பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்த பாஜகவின் முதலாவது ஆட்சிக் காலத்தில் பாரத் பெட்ரோ லியம் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலி யம் நிறுவனம் ஆகியவற்றை தனியார்மயமாக்க திட்டமிடப்பட்டது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த 2003ம் ஆண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், எண்ணெய் நிறுவனங்களை தேசியமயமாக்கும் சட்டத்தில் நாடாளுமன்றம் திருத்தங் களை செய்தால் மட்டுமே, அந்நிறுவன பங்குகளை விற்க முடியும் என்று தீர்ப்பளித்தது. இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டில் ‘வழக்கொழிந்த’ 187 சட்டங் களை மோடி தலைமையிலான பாஜக அரசு நீக்கியது. அவ்வாறு நீக்கப்பட்ட சட்டங்களில் எண்ணெய் நிறுவனங்களை தேசியமயமாக்கும் சட்டமும் ஒன்று என்ற அதிர்ச்சிகரமான தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், எண்ணெய் நிறுவனங்களை தேசிய மாக்கும் சட்டம் சத்தமில்லாமல் நீக்கப்பட்டு விட்டதென்றார். இதனால் பாரத் பெட்ரோலியம் நிறுவன பங்கு களை இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கோ, வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களுக்கோ விற் பதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை மத்திய அரசு இனிமேல் பெற வேண்டிய தில்லை என்றும் அவர் தெரிவித்தார். பாரத் பெட்ரோலியம் நிறுவன பங்கு களை தனியாருக்கு விற்பதால் இந்தியா வில் பெட்ரோல்-டீசல் சில்லரை விற்ப னையில் எந்த தாக்கமும் ஏற்படாது; இருந்தபோதும், பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்று நிதி திரட்ட அரசு நிர்ணயித்துள்ள இலக்கை அடைய உதவும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரம் தெரிவிக்கிறது.