புதுதில்லி:
பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம்மற்றும் விவசாயிகள் போராட்டத் தால், நாடாளுமன்றம் அமளி துமளிப்பட்டாலும், மோடி அரசு தனது கார்ப்பரேட் எஜமானர்களை மனங்குளிரச் செய்யும் திட்டத்திலிருந்து கொஞ்சமும் விலகுவதாக இல்லை.
ராணுவத் தளவாடத் தொழிற்சாலை களை நூறு சதவிகிதம் தனியார்மய மாக்குவதுடன், பாதுகாப்புத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், ‘அத்தியாவசிய பாதுகாப்பு சேவை மசோதா- 2021’-ஐ சத்தமில்லாமல் மக்களவையில் தாக்கல் செய்தது. ஏற்கெனவே, அவசரச் சட்டம் உள்ளநிலையில், நிரந்தரமாக சட்டம் இயற்றும் வேலையில் இறங்கியது.
தற்போது, இந்தியாவின் மகாரத்னா நிறுவனங்களில் ஒன்றானபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தில் 100 சதவிகிதம் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்துஒன்றிய பாஜக அரசு உத்தரவிட்டுள் ளது.பாரத் பெட்ரோலியம் நிறுவனத் தில் ஒன்றிய அரசுக்கு இருக்கும் 53.29 சதவிகிதப் பங்குகளைத் தனியாருக்கு விற்க, கடந்த 2019 செப்டம்பர் 30 அன்றே முதலீட்டாளர்கள் குழுமூலம் ஒப்புதல் பெற்று, 2020 மார்ச் 31-ஆம் தேதிக்குள் பங்குகளை விற்றுமுடிப்பது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா முதல் அலை காரணமாக ஒன்றிய பாஜக அரசு நினைத்ததுநடக்கவில்லை.
எனினும் திட்டத்தைக் கைவிடாதஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, அரசு நிறுவனங்கள் சில தனியார்மயமாக்கப்படும் எனவும், அதன்மூலம் 23 பில்லியன் டாலர் வரையில்நிதி திரட்டத் திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 6.9 பில்லியன் டாலர் நிதி திரட்டுவதும் அவரின்திட்டத்தில் அடங்கி இருந்தது.அதன்படி முதற்கட்டமாக பாரத்பெட்ரோலியம் நிறுவனத்தின் டேட்டாக்களைப் பார்க்க ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி வழங்கப்பட் டது. 2021 ஏப்ரல் மாதத்தின் கடைசிவாரத்திலேயே இதற்கான அனுமதிவழங்கப்பட்ட நிலையில், இரண்டுநிறுவனங்கள் பாரத் பெட்ரோலியத்தின் பங்குகளை வாங்குவதற்கு முன்வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், 53.29 சதவிகிதப் பங்குகளை அல்லாமல் 100 சதவிகிதப்பங்குகளையும் விற்பதாக இருந் தால், தங்களின் கொள்ளைக்கு வசதியாக இருக்கும் என்று அந்த நிறுவனங்கள் கூறிவிட்டதாக தெரிகிறது.நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், ஒன்றிய அரசுக்கும் அதுவே சரியெனப்படவே, தற்போது பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் 100 சதவிகிதம் அந்நிய முதலீட்டை அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன்பு கச்சா எண்ணெய் நிறுவனத்தில், குறிப்பாக அரசுக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் நிறுவனத்தில் அதிகப்படியாக 49 சதவிகிதம் பங்குகளை மட்டுமே ஒரு வெளிநாட்டு நிறுவனம் கைப்பற்ற முடியும்.ஆனால் தற்போது 100 சதவிகிதப் பங்குகளையும் கைப்பற்ற முடியும் என்ற நிலையை ஒன்றிய பாஜக அரசுஏற்படுத்தியுள்ளது. இந்த 100 சதவிகித அந்நிய முதலீட்டுக்கான அனுமதியை அரசு ஆணையாகவே ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள காரணத்தால், சட்டப்பூர்வமான மாற்றங்கள் செய்ய வேண்டியஅவசியம் இல்லை என்று கூறப்படுகிறது.இதனால், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தைக் கைப்பற்ற அனில் அகர்வாலின் வேதாந்தா, அப்போலோ மேனேஜ் மெண்ட், திங்க் கேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது 53.29 சதவிகிதப் பங்குகளை கைப்பற்றுவதன் மூலம் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் தங்களின் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர தீவிரம் காட்டுவதாக கூறப்படுகிறது.
பன்னாட்டு நிறுவனங்களான எக்ஸோன்மொபில், ஆரம்கோ, இந்திய ஏகபோக நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவையும் ஏற்கெனவே இதற்காக காத்திருக் கின்றன.தனியாரின் இந்த துடிதுடிப் புக்குக் காரணம், பாரத் பெட்ரோலியம் ஈட்டும் லாபம்தான். ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டும் கம்பெனிகள் ‘மகாரத்னா’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த மகாரத்னா பட்டியலில் 2015-ஆம் ஆண்டுமுதல் தொடர்ச்சியாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் இருந்து வருகிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தொடர்ந்து லாபத் தில் இயங்கிவருகிறது.
இந்த இடத்தில், ரிலையன்ஸ் பெட்ரோ கெமிக்கல்ஸ் கம்பெனி சுமார் 65 பில்லியன்டாலர் கடனில் உள்ளது என்பதையும்குறிப்பிட்டுச் சொல்லியாக வேண் டும்.1991 முதல் ஒன்றிய அரசால்‘எக்ஸலண்ட்’ ரேட்டிங் கொடுக்கப் பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனமும்பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன்தான். நாட்டிலேயே ஆறாவது மிகப்பெரிய தொழில் நிறுவனம். பெட்ரோலிய உற்பத்திப் பொருட்களின் விற்பனையில் 24 சதவிகிதத்தைதன்வசம் கொண்டிருக்கும் நிறுவனம். 1991-இல் உலகமயத்திற்குள் நுழைந்த காலத்தில் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை மட்டுமே விற்கவோ, மூடவோ செய்வோம் என்று ஒன்றிய ஆட்சியாளர்கள் கூறினார்கள். வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியின்போது இதற்கென தனித்துறையே உருவாக்கப்பட்டது. ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசோ, லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மீதும் தற்போது கை வைத்துள்ளது.
அதுமட்டுமல்ல, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனில் 13,000 நிரந்தரத் தொழிலாளர்களும் இருபதாயிரத்திற்கு மேலான ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர். பொதுத்துறை நிறுவனம் என்பதால் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர் ஆகியோர்க்கான இடஒதுக்கீடு முறையில் பணிநியமனம் நடைபெறுகிறது. தனியார் மயத்தின் மூலம் இவை அனைத்தையும் மோடி அரசு காவு கொடுக்க உள்ளது.