மாஸ்கோ
கொரோனவால் அதிக உயிரிழப்பைச் சந்தித்துத் திணறி வரும் ஐரோப்பா கண்டத்தில் இதுவரை 1 லட்சத்து 9 ஆயிரம் பலியாகியுள்ளனர். அந்த கண்டத்தில் உள்ள நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து கொரோனவை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டாலும் அவை கொரோனா முன்பு கானல் நீரைப் போன்று காணாமல் போய்விடுகிறது.
ஐரோப்பா கண்டத்தையே கொரோனா மிரட்டி வந்தாலும் இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகள் பலத்த சேதாரத்தைச் சந்தித்து வருகிறது. தற்போது அந்த பட்டியலில் புதிதாக ரஷ்யா சேர்ந்துள்ளது. உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் கொரோனா தாறுமாறான வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 57 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 57 ஆயிரத்து 999 ஆக உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 513 ஆக உள்ள நிலையில், 4,420 பேர் கொரோனவை வென்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தொடர்ந்து ரஷ்யாவை மிரட்டி வருவதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.