சீர்காழி, அக்.30- நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடியிலிருந்து அளக்குடிக்குச் செல்லும் கொள்ளிடம் ஆற்றின் வலதுகரை சாலை முதலைமேடு என்ற இடத்தில் சென்ற வருடம் உடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இந்த கரை சாலையின் மேல்பகுதி கரைந்து போய் உள்ளது. இதனால் சாலை குறுகியுள்ளதால் கார் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்லும் பலர் இந்த உடைப்பின் வழியே செல்லும் போது தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். சைக்கிள்களில் பள்ளி செல்லும் மாணவர்கள் அவதியடைகின்றனர். சென்ற வருடம் மழையின் போது உடைப்பும் அரிப்பும் ஏற்பட்டு கரைந்த இந்த சாலையை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆற்றின் கரையோர கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.