சேலம்,ஆக.6- ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு பிரிவு 370-ஐ ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து செவ்வாயன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப் பட்ட சிறப்பு பிரிவு 370-ஐ மத்திய பாஜக அரசு ரத்து செய்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சேலம் மாநகர வடக்கு பகுதிக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய பாஜக அரசின் ஜனநாயக படுகொலை நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதன்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட முயன்றதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முன்னதாக, இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாநகர வடக்கு பகுதித் தலைவர் பி.சதீஷ் குமார் தலைமை வகித்தார். மாநகர வடக்கு பகுதிச் செயலாளர் ஆர்.வி.கதிர்வேல், மாவட்டப் பொருளாளர் வெங்கடேஷ், மலைவாழ் இளைஞர் சங்க மாநில பொதுச் செயலாளர் என்.பிரவீன் குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
அனுமதி வழங்கியபின் ரத்து செய்த காவல்துறை
முன்னதாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மத்திய அரசின் ஜனநாயக படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு திங்களன்று சேலம் நகர காவல் துறையினரிடம் கடிதம் வழங்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் இரவு 7 மணிக்கு அனுமதி வழங்கிவிட்டு, இரவு 9.30 மணியளவில் திடீரென ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை எனவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனக்கூறி ஆர்ப்பாட்டத்திற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்வதாக அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர். இதனைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.