சென்னை:
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய பாஜக அரசு ஜனநாயகப் படுகொலை செய்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.தமிழக சட்டப்பேரவையில் செவ்வாயன்று கேள்வி நேரம் முடிந்ததும், விவகாரம் குறித்து விவாதம் நடைபெற்றது.அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு. க.ஸ்டாலின்," நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர், நீட் தேர்வை ரத்து செய்ய திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மாநில அரசு செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.
ஏகமனதாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிய தமிழக அரசின் நீட் எதிர்ப்பு மசோதாவை 27 மாதங்களாக நிலுவையில் வைத்திருந்தது ஜனநாயகப் படுகொலை என்றும் அவர் கடுமையாக சாடினார்.நாடாளுமன்றத்துக்கு இணையாக சட்டம் இயற்ற சட்டசபைக்கு அதிகாரம் உண்டு. நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற மீண்டும் உச்சநீதி மன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும். நீட் மசோதாவை மத்திய அரசு நிராகரிப்பதன் மூலம் கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது என்றும் ஸ்டாலின் கூறினார்.தமிழக சட்டப்பேரவையின் ஆணிவேரை அசைத்துப்பார்த்த மத்திய பாஜக அரசை கண்டித்கும் வகையிலும் நீட் பிரச்சனையில் தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிராகவும் பேரவையில் கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.
ஜல்லிக்கட்டு வேறு...
நீட் தேர்வு விவகாரத்தில் கட்சி பாகுபாடின்றி போராடுவதற்கு திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தயாராக உள்ளது. ஜல்லிக்கட்டு பிரச்சனையில் அவசர மசோதா கொண்டு வரப்பட்ட தோடு சிறப்பு சட்டமன்றமும் கூட்டப்பட்டது. அதே வழியில் நீட்தேர்வு விவகாரத்திலும் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உரிய அழுத்தத் தைக் கொடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.அப்போது குறுக்கிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்," ஜல்லிக்கட்டு விவகாரம் என்பது தமிழகம் தழுவிய பிரச்சனை. நீட் அப்படி அல்ல. அகில இந்திய அளவிலான பிரச் சனை. மற்ற மாநிலங்கள் அனைத்தும் ஏற்றுக் கொண்ட நிலையில் தமிழ்நாடு மட்டும்தான் விலக்கு கேட்டு உள்ளது. எனவே ஜல்லிக்கட்டு போன்று வழிவகை இதில் இல்லை என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய கடைசி விளிம்பு வரை போராடுவோம் என்றார்.
'நீட்' எதிர்ப்பில் உறுதி...
நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட நிலையிலும் கடந்த பத்தாண்டுகளில் மருத்துவ மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 3,500 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மருத்துவராக வேண்டும் என்ற மாணவர்களும் அவர்களது கனவும் கருகி விடக்கூடாது என்பதில் அதிமுக அரசு உறுதியாக இருக்கிறது. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
முதல்வர் ஆவேசம்...
இந்த விவாதத்தின் போது பேசிய மு.க.ஸ்டாலின், "ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்த வரைக்கும் தமிழ்நாட்டுக்குள் நீட் தேர்வை நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியது திமுக தான் என்றும் உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று தடை பெற்றதும் திமுக தான் என்றும் கூறினார்.தொடர்ந்து பேசிய ஸ்டாலின் 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் நீட் தேர்வு தமிழ் நாட்டுக்குள் நுழைந்தது என்றும் வலுக்கட்டாயமாக 2018 திணித்த போது அதிமுக அரசு வேடிக்கை பார்த் தது என்றும் குற்றம் சாட்டினார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் நீட் தேர்வு எப்போது வந்தது? யார் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது? என்று கேள்வி எழுப்பினார்.