கரூர், ஜூலை 14- கர்நாடகாவில் பாஜக அரசு செய்யும் ஜனநாயக படுகொலைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கரூரில் சனியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற செ.ஜோதிமணி எம்பி., செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், கர்நாடகாவில் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் ஆளும் அரசை கவிழ்ப்பதில் பாஜக மேற்கொண்டு தோல்வியைச் சந்தித்துள்ளது. அசுரபலத்துடன் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு நல்லது செய்யாமல் தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னை, 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதமாக கூடியிருப்பது, எல்லையில் சீனா ஊடுருவியுள்ளது, விவசாயிகள் தொடர் தற்கொலை போன்றவற்றில் அக்கறை காட்டாமல் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் வகையில் நடப்பது வெட்கக்கேடானது. அங்கு ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ரூ.80 கோடி, 100 கோடி என விலை பேசுகிறார்கள். இதற்கான பணம் வெள்ளைப் பணமா அல்லது டிஜிட்டல் மூலம் வந்த கருப்புப் பணமா என்பதை பிரதமர் நரேந்திர மோடி இந்த தேசத்திற்கு விளக்க வேண்டும். கருப்பு பணத்தை ஒழிப்போம் என ஆட்சிக்கு வந்த பாஜக இன்று கருப்பு பணத்தை பயன்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஜனநாயக படுகொலை செய்து கொண்டிருக்கிறது. இதனை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். பண மதிப்பு இழப்புக்கு பிறகு பாஜக கட்சிக்கு மட்டும் எப்படி அதிகளவு பணம் வந்தது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். இந்த ஜனநாயக படுகொலைக்கெல்லாம் காங்கிரஸ் பயந்து விடாது. மகாராஷ்டிரா, குஜராத், பீகார் போன்ற மாநிலங்களில் ராகுல்காந்தி மீது போடப்பட்ட வழக்குகளை அவர் சந்தித்து வருகிறார். கர்நாடகாவை பொறுத்தவரை காவிரி ஆணையத்தை அமல்படுத்த வேண்டிய பாஜக அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசு, தமிழகத்திற்கு காவிரி நதி நீரில் மட்டுமின்றி, நிதி ஒதுக்கீட்டிலும் வஞ்சித்து வருகிறது. நீட் தேர்வில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு தீர்மானங்களையும் திருப்பி அனுப்பி வஞ்சித்துள்ளது. இதனை தமிழக அரசு மக்களுக்கு தெரியாமல் மறைத்துள்ளதை திமுக தலைவர் முக.ஸ்டாலின் அம்பலப்படுத்தியுள்ளார். தொடர்ந்து தமிழகத்தில் இருந்து சென்றிருக்கும் 37 உறுப்பினர்களும் மத்திய அரசின் மக்களுக்கு எதிரான கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம். எங்களுக்கு தகவலை கூட இந்தியில் அனுப்பியதை மறுத்ததால் ஆங்கிலத்தில் அனுப்பத் தொடங்கியுள்ளனர். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தொடர்ந்து இந்தியை திணிக்கும் போக்கை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. விரைவில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும், அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது என்றார்.