குடியாத்தம்:
வயது முதிர்ந்த பெற்றோரை பராமரிக்காததால் மகன் பெயரில் எழுதி வைத்த சொத்துக்களின் பதிவை உதவி ஆட்சியர் ரத்து செய்து நடவடிக்கை மேற் கொண்டார்.
வேலூர் மாவட்டம் பேரணாம் பட்டு கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாகண்ணு (80). இவருடைய மனைவி வசந்தா (75). இவர்களுக்கு முரளி, சங்கர், பிரபு என்ற 3 மகன்களும் தமிழ்ச்செல்வி, பத்மா என்ற 2 மகள்கள்.மூத்த மகன் முரளி, இரண்டாவது மகன் சங்கர் இருவரும் மரணமடைந்து விட்டனர். இதனையடுத்து பெங்களூரில் வசித்து வந்த இளைய மகன் பிரபுவை பேரணாம்பட்டுக்கு வந்து விடுமாறும், வயது முதிர்ந்த எங்களை பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, ரூ.25 லட்சம் மதிப்பிலான 2 வீடுகளை இளைய மகன் பிரபுவின் பெயரில் பெற்றோர் எழுதி கொடுத்துள்ளனர்.சில மாதங்களே பெற்றோரை கவனித்த பிரபு அதன்பிறகு சரியாக பராமரிக்காமல் கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.தங்களுக்கு ஏற்பட்ட நிலையை வெளியூரில் உள்ள மகள்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சகோதரிகளின் அறிவுரையும் பிரபு கேட்கவில்லை.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி ராஜாக்கண்ணு, வசந்தா தம்பதியர் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் எங்களை மகன் பிரபு கவனிக்கவில்லை, கொடுமைப்படுத்துகிறார், பிரபு மீது எழுதி வைத்த சொத்துக்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம் 2007-ன் படி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு குடியாத்தம் உதவி ஆட்சியர் ஷேக் மன்சூருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.அதன்படி உதவி ஆட்சியர் ஷேக் மன்சூர் விசாரணை நடத்தினார். அதில் வயது முதிர்ந்த பெற்றோரை பிரபு பராமரிக்காமல் துன்புறுத்தி வந்தது தெரியவந்தது.உடல்நலப் பாதிப்போடு ஒரு ஆட்டோவில் குடியாத்தம் உதவி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த ராஜாக்கண்ணு, வசந்தா தம்பதியரிடம் உதவி ஆட்சியர் ஷேக்மன்சூர், பிரபு பெயரில் எழுதி வைத்த சொத் துக்களின் பதிவை ரத்து செய்த தற்கான உத்தரவை அளித்தார். அந்த உத்தரவை வயது முதிர்ந்த தம்பதியர் கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டனர்.