tamilnadu

img

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான நிவாரணங்களை வழங்கிடுக!

 முதல்வருக்கு மாதர் சங்கம் கடிதம்

சென்னை,ஏப்.12- கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் ஈடுசெய்ய முடியாத இழப்பை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் மக்களுக்கு போதுமான நிவாரண உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்திந்திய  ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கோவிட்-19 என்கிற"நாவல்  கொரோனா வைரஸ்" தொற்று புவிப்பரப்பு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி  வருகிறது. நோய்த் தொற்றை தவிர்ப்பதற்கு சமூக தனித்திருத்தல் ஒன்று தான் பயன்தரக்கூடியது என்பதால் அரசின் உத்தரவை பெருவாரியான மக்கள் ஏற்று கடைப்பிடித்து வருகின்றனர்.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் திடீரென எதிர்பாராத தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.தினசரி குடும்பத் தேவைகளுக்கு தினசரி வருவானம் ஈட்டிட வேண்டிய நிலையில் தான் பெருவாரியான குடும்பங்கள் உள்ளன. முறைசாரா வேலைகள் எதுவும் தற்போது நடைபெறவில்லை.

விவசாயம்,நெசவு,தையல்,கைத்தொழில்கள் போன்ற அனைத்தும் ஊரடங்கால் முடங்கியுள்ளன. இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. இந்நிலையில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும்  ரூ.1000 மற்றும் அரிசி,பருப்பு,சர்க்கரை,கோதுமை, சமையல் எண்ணெய் வழங்குவதாக அரசு அறிவித்து வழங்கிக்கொண்டிருக்கிறது. ஈடுசெய்ய முடியாத இழப்பை மக்கள் சந்தித்து வரும் சூழ்நிலையில் மேலும் போதுமான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும் பொதுமக்களின் நலன் கருதி கீழ்க்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றித்தர வேண்டும் என்றும்  ஜனநாயக மாதர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

சர்க்கரை மட்டும் பெறக்கூடிய  குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுவதில்லை என்பது சரியானதல்ல.அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அடிப்படையில் ரூ. 1000 வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.1000 என்பது எந்தவகையிலும் போதுமானதாக இல்லை.எனவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 இரண்டாவது தவணையாக  வழங்க வேண்டும்.

நியாயவிலைக் கடைகள் மூலமாக மளிகைப் பொருட்கள் ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும் என்பது ஏற்புடையதல்ல. அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் கேரள அரசைப் போல் இலவசமாக வழங்க வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் இலவச கேஸ் சிலிண்டரை வழங்குவதற்கு மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில்  (MNREGA) வேலை செய்தவர்களுக்கு 2 நாள் ஊதியம் கூடுதலாக வழங்கப்படும் என்பதை 5 நாள் ஊதியமாக அதிகரித்து வழங்க வேண்டும்.

குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் 15 கிலோ அரிசி,மற்றும் தலா ஒரு கிலோ பருப்பு,சமையல் எண்ணெய் வழங்கப்படும் என்கிற அறிவிப்பு புலம் பெயர் தொழிலாளிகளுக்கும் பொருந்தும் என்கிற நீதிமன்ற உத்தரவையும் உரிய முறையில் செயல்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் பல கடைகளில் தரமான அரிசி வழங்கப்படவில்லை. (உதாரணமாக விருதுநகர்,நகர் பகுதி கடை எண் 5, திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் கூட்டுறவு பண்டகசாலை 1 7 8 7 , கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி உடையார்குடி CP002,கடலூர் மாவட்டம் பழஞ்சநல்லூர்  கடை எண் CP0066, மதுரை அருள்தாஸ்புரம்  கடை எண் 5, மதுரை செல்லூர் கடை எண் 012) எனவே அனைத்து ரேசன் கடைகளிலும் தரமான அரிசியை வழங்க வேண்டும். சென்னை உள்ளிட்டு தமிழகம் முழுவதும் போதுமான குடிநீர் ஏற்பாடுகளை செய்து கொடுத்தால்தான் இப்படிப்பட்ட சமூக விலகியிருத்தலை மக்கள் கடைப்பிடிக்க முடியும். எனவே தமிழக அரசு அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பான போதுமான குடிநீர் வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.