சென்னை, ஜன. 7- வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதியை விடுவிக்க முடியாது என்று சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவரது மனைவி ஸ்ரீநிதி.இவர்கள் இருவரும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015-ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுண்டேசன் என்ற நிறுவனத்துக்கு ஒரு ஏக்கர் 4.25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் 3 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு மட்டும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் 6.38 கோடி ரூபாயையும், அவரது மனைவி ஸ்ரீநிதி பெற்ற ரொக்கப்பணம் 1.35 கோடி ரூபாயையும் வருமானவரி கணக்கில் காட்டப்படவில்லை.
இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரமும், ஸ்ரீநிதியும் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி லிங்கேஸ்வரன் விசாரித்தார். இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று காலையில் நீதிபதி பிறப்பித்தார். அதில், இந்த வழக்கில் இருவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளதால், இருவரையும் வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது. அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்கிறேன். இந்த வழக்கு விசாரணையை வருகிற 21ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன். அன்று கார்த்தி சிதம்பரமும், ஸ்ரீநிதியும் நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஆஜராக தவறினால், அவர்களுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்து உத்தரவிட்டார்.