ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சுற்றுச்சூழல் நீதி கேட்டு போராடிய பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட 2-ம் ஆண்டு நினைவு நாள்
பிரிட்டனைச் சேர்ந்த அனில் அகர்வாலுக்கு சொந்தமான ஸ்டெர்லைட், மகாராஷ்ட்டிரா மாநிலம், கொங்கனி கடற்கரையில் உள்ள இரத்தினகிரியில் இருந்து விரட்டப்பட்டவுடன் தமிழ்நாட்டில் தென் தமிழகத்தை லாபம் ஈட்டுவதற்கு தேர்ந்தெடுத்தது. நேரடியாக குறைந்த அளவு தொழிலாளர்களுடனும், மறைமுகமாக எந்த பாதுகாப்பும் அற்ற ஆயிரக்கணக்கான தற்காலிக தொழிலாளர்களுடன் 500 கோடி ரூபாய் மூலத்தனத்துடன் தூத்துக்குடியில் கால்பதித்த ஸ்டெர்லைட், சுற்றுச்சூழலை பாழ்படுத்தி, ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டக்கூடிய தொழிற்சாலையாக உருவெடுத்தது. 2500 கோடி
ரூபாய் மூலதனத்தில் தனது 2-வது யூனிட்டையும் ஆரம்பிக்கக்கூடிய அளவிற்கு வளர்ந்தது. இவ்வாறு வளர்வதற்கும், சுரண்டலை நியாயப்படுத்தும் சிந்தனையை விதைப்பதற்கும், மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் பல திட்டங்களை செயல்படுத்தியது. இருந்த போதும் மக்களின் போராட்டம் தொடர்ந்து நடந்தது.
ஸ்டெர்லைட்டின் விதிமீறல்களை பட்டியல் இட்டு அதை மூடிட சென்னை உயர்நீதிமன்றம் 28.09.2010 அன்று உத்தரவிட்டது. இந்த வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் தாக்கல் செய்த பொதுநல வழக்கும் அடங்கும். இதன் பிறகு சுற்றுச்சூழல் பாதிப்பை ஸ்டெர்லைட் ஏற்படுத்தியுள்ளது என்பதை சுட்டிக்காண்பித்து 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து மீண்டும் செயல்பட உச்சநீதிமன்றம் 02.04.2013 அன்று அனுமதி வழங்கியது. இந்த அனுமதியில் ஸ்டெர்லைட்டை மூடுவதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்கலாம் என்று குறிப்பிட்ட போதிலும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு 5 ஆண்டுகள் தேவைப்பட்டது.
ஆற்றல் மிக்க அறவழிப் போராட்டம்
09.07.2013 முதல் அபாயகரமான கழிவுகளை கையாளுதல் மற்றும் அகற்றுதல் சட்டப்படி அனுமதி இல்லாத போதிலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்த பல்வேறு நிபந்தனைகளை புறக்கணித்தும், விதி மீறல்களில் ஈடுபட்டும் ஸ்டெர்லைட் உச்சபட்ச லாபத்தை ஈட்டி வந்த நிலையில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக, குறிப்பாக அதன் 2-வது யூனிட்டும் செயல்பட இருக்கின்றது என்பது தெரிய வந்த நிலையில், ஆற்றல்மிக்க ஊக்கத்துடன் மக்களின் அறவழிப் போராட்டம் துவங்கியது. மக்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பக்கபலமாக நின்றது. 12.02.2018 அன்று அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் துவங்கிய மக்களின் போராட்டம் 99 நாட்கள் நீடித்த போதிலும் அரசு நிர்வாகத்தினால் இந்த போராட்டம் உதாசீனப்படுத்தப்பட்டது. 04.04.2018 அன்று கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி ஆகியோர் தலைமையில் ஸ்டெர்லைட்டின் நுழைவு வாசல் வரை சென்று முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதே போல் 20.04.2018 அன்று வாலிபர் சங்க தோழர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். மாணவர் சங்க தோழர்கள் வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டத்தை ஒருங்கிணைத்தனர்.
அந்த 100வது நாள்
100-வது நாளில், 22.05.2018 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை நோக்கி பொதுமக்கள் ஆண், பெண் பாகுபாடுன்றி, குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக ஊர்வலமாக சென்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் தலைமையிலான தோழர்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் நீதி கேட்டு எந்த ஒரு ஆயுதமுமின்றி அமைதியாகச் சென்ற மக்கள் மீது காவல்துறை வன்முறையை ஏவியது. 22.05.2018 அன்றும் அதன் பிறகும் நடத்திய துப்பாக்கி சூடு நிகழ்வுகளில் 15 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் கொடுங்காயமுற்றனர். அவசர கதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்தது, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இல்லாதது, ஒரு பகுதி பொதுமக்களை வேறு பகுதியில் போராடிட நிர்பந்தித்தது. இணையத்தள சேவையை முடக்கியது, படுகொலையை நியாயப்படுத்துவதற்காக 200-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஜோடனைசெய்து பொதுமக்களை சித்ரவதை செய்தது, தேசிய பாதுகாப்பு சட்டத்தையும், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தையும் நடைமுறைப்படு த்தியதன் மூலமாக திட்டமிட்ட படுகொலை நடத்தப்பட்டதாகவே கருதிட வேண்டியுள்ளது.
22.05.2018 அன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் தலைமையில் அரசின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் சட்ட விரோதமாக செயல்பட்டுள்ளதினால் துப்பாக்கிச் சூடு நிகழ்வுகளில் இறந்து போனவர்களுக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டுமென்று உண்ணாவிரதம் நடைபெற்றது.
சிபிஐ விசாரணை
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்று 29.05.2018 அன்று கே.எஸ்.அர்ச்சுனன் சிபிஐக்கு விரிவான புகார் மனுவை அனுப்பிவைத்தார். 14.08.2018 அன்று மதுரை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணை செய்திட வேண்டுமென்று உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு 18.02.2019 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. தோழர்.கே.எஸ்.அர்ச்சுனனின் புகார் மனுவை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்ய வேண்டி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கே.எஸ்.அர்ச்சுனனின் புகார் மனுவானது முதல் தகவல் அறிக்கையில் ஒரு பகுதிதான் என்று சிபிஐ தாக்கல் செய்த அபிடவிட்டின் பேரில் 21.01.2019 அன்று முடித்து வைக்கப்பட்டது.
03.06.2018 அன்று தூத்துக்குடிக்கு வந்த மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, போலீசாரின் மனிதஉரிமை மீறல்களைகண்டித்ததோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகு தனித்தீவாக மாறி இருந்த தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதலாகவும், போலீசாரின் அத்துமீறலுக்கு சாட்டையடியாகவும் 18.06.2018 அன்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத், தலைமையில் நடந்த பொதுக்கூட்டம் அமைந்தது.அரசியலமைப்பு சட்ட உரிமைகளை பாதுகாப்பதில் முன்னின்ற வழக்கறிஞர்களை பாராட்டிய பிருந்தாகாரத், இதே போல இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றுவது, வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் 20.12.2018 அன்று மாநில சட்ட அமைச்சரை சந்தித்து வலியுறுத்தப்பட்டது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூடல் விசயத்தில் தேசியபசுமைத்தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் இடதுசாரி வழக்கறிஞர்கள் குழுவினரால் வழக்கு நடத்தப்பட்டு வருகிறது.ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது மற்றும் காவல்துறை துப்பாக்கிச் சூட்டிற்கு நியாயம் கிடைக்கும் வரை நமது போராட்டங்கள் தொடரும்.\
====இ.சுப்பு முத்துராமலிங்கம்===
வழக்கறிஞர், தூத்துக்குடி