அரியலூர், ஏப்.30-பொன்பரப்பி வன்முறை வெறி யாட்டத்தின் மூலம் 250-க்கும் மேற்பட்டதலித்மக்கள் வாக்களிக்க முடியாத நிலையில் மறுவாக்குப்பதிவு நடத்து வதற்கு வாய்ப்பில்லை என்ற தலைமைதேர்தல் அதிகாரியின் அறிவிப்பு அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தலித்துகள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் செவ்வாய்க்கிழமையன்று நேரடி கள ஆய்வு மேற்கோள்ளப் பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், துணைப் பொதுச் செயலாளர் சின்னை பாண்டியன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.மணிவேல், தீண்டாமை ஒழிப்புமுன்னணி மாவட்டத் தலைவர் என்.செல்லத்துரை, செயலாளர் கருணாநிதி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி உள்ளிட்டோர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர் களிடம் பேசிய சாமுவேல்ராஜ், பொன்பரப்பியில் உள்ள தலித் மக்களின் வாழ்க்கைத்தரம் மிக மிகப் பின்தங்கி உள்ளது. இவர்களுக்கு எந்தவிதமான வேலை வாய்ப்புகளும் இல்லை. இவர்களுக்கு சொந்தமாக நிலம் ஏதும் கிடையாது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்கள் சென்னையில் தினக்கூலிகளாக வேலை செய்து வருகின்றனர்.கையறு நிலையில் உள்ள இந்த மக்கள் மீதுதான் இத்தகைய கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கு வதோடு அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவது அரசின் கடமையாகும். எனவே, உடனடியாக இங்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக சிறுதொழில்கள் அமைத்து அனைத்துக் குடும்பங்களுக்குமான வேலைவாய்ப்புகளை உத்தரவாதப் படுத்த வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இங்குள்ள தலித்துகள்மீது நடத்தப்பட்ட வன்முறை வெறி யாட்டத்தால் 250-க்கும் மேற்பட்ட தலித் மக்கள் வாக்களிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஜனநாயகத்தில் ஒருவர் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்படுவதே மிகப்பெரியதவறு. பொன். பரப்பியில் 250-க்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியாத சூழ்நிலையில், மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கு வாய்ப்பில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்திருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை ஆகும். இதை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் உட னடியாக முன்வர வேண்டும் என்றார்.
காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை
பின்னர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சீனிவாசனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் தெரிவித்திருப்பது: குற்றச் செயலில் ஈடுபட்டு முதல் தகவல் அறிக்கையில் பெயர் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். தாக்கு தலுக்கு உள்ளான அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வருடம் தலித் குடியிருப்புகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்.கிராமத்தின் பாதுகாப்பை உறுதிப் படுத்திட கண்காணிப்பு கேமராக்கள் அமைத்திட வேண்டும். அரசுத் திட்டத்தின் வழியாக வீடுகள்தோறும் கழிப்பறை அமைத்துதர வேண்டும். தேசிய வேலை உறுதித்திட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதைத் தடுத்து தலித்துகளுக்கான வேலையை உறுதிப்படுத்த வேண்டும். பள்ளி மற்றும் விடுதி மாணவர்களின் பாது காப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த தாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.