tamilnadu

img

தேசிய கல்விக் கொள்கை 2020: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்வினை

நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதமுமின்றி, மக்கள் கருத்துக் கேட்பு என்ற பெயரில் கிடைக்கப்பெற்ற இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுக் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் புறந்தள்ளி, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என எந்தத் தரப்பினரின் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொள்ளாமல் தானடித்த மூப்பாக நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு வெளியிட்டுள்ள விரிவான விமர்சனக்குறிப்பு இது.   

அறிமுகம்

1

தேசிய கல்விக் கொள்கை - 2020, உண்மையில் கொள்கை ஆவணம் என்பதை விட, கனவு காணும் ஆவணமாகவே இருக்கிறது. இந்த ஆவணம் கவர்ந்தி ழுக்கக்கூடிய, இனிப்பு முலாம் பூசப்பட்டதாக இருந்தபோ திலும், தேவையான விவரங்கள், செயல்படுத்துவதற்கான திட்ட வரைபடம் ஆகியவற்றைத் தன்னிடம் கொண்டிருக்க வில்லை. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள பல குறிப்பிட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தும் வகையில் இல்லை. கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெரும் இடையூறு விளைவிக்கும் வகையில் அவை இருப்பதோடு, பலருக்கும் தொலைதூரக் கனவாக இருக்கின்ற கல்விக்கான பொதுச் செலவினங்களை கணிசமாக அதி கரிப்பதற்கான தேவையை ஏற்படுத்துவதாகவும் இருக்கின் றன. கல்விக்கான பொது முதலீட்டை, நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 6 சதவீதமாக படிப்படியாக உயர்த்துவது குறித்து இந்த தேசிய கல்விக் கொள்கை பேசுகிறது.ஆனா லும் இதுபோன்ற வாக்குறுதிகள் கோத்தாரி குழு அறிக்கை வெளியான 1966ஆம் ஆண்டு முதலே இருந்து வருகின்றன. அரசாங்கத்தின் தற்போதைய செயல்பாடுகள், கல்விக்கான வருடாந்திர வரவு செலவுத் திட்டச் செலவினங்களை அதிக ரிப்பதற்கான உறுதிப்பாடு மத்திய அரசிற்குத்  தேவையாக இருப்பதைக் காட்டுகின்ற வகையிலேயே இருந்து வருகின்ற அதே நேரத்தில், இந்த தேசிய கல்விக் கொள்கையும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள பல திட்டங்களும் வெளிப்படையான தெளிவின்மையுடனே  இருக்கின்றன. கல்வியை நிர்வ கிப்பதற்காகவும், ஒழுங்குபடுத்துவதற்காகவும் ஏற்படுத்தப் படப் போகின்ற மத்திய நிறுவனங்கள் கூட்டாட்சி தத்துவத்தை யும், கல்வி அமைப்புகளின் தன்னாட்சியையும் குறைத்து மதிப்பிடுகிற அதே வேளையில், கல்விசார் அதிகாரங்கள் அனைத்தையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் தள்ளுவ தாகவும், அதில் சொல்லப்பட்டிருக்கின்ற, அதில் உள்ள வரிகளுக்கு இடையில் மறைந்திருக்கின்ற விஷயங்கள் நமக்கு அதிக வேதனையை ஏற்படுத்துவதுமாகவும் இருக்கின் றன. அதிகரித்து வருகின்ற வணிகமயமாக்கல் மற்றும்  கல்வி பெறுவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளுடன்,  எளிதாக பிறருடைய கருத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மையுடைய பள்ளிக் குழந்தைகளின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்கள் இந்திய யதார்த்தத்தின் பன் முகத்தன்மையை அழித்து, நாடு முழுவதையும் ஒரே தன்மை யுடையதாக மாற்றுவதாக இருக்கின்றன. இந்த கருத்தியல் உந்துதல் பகுத்தறிவிற்கு மாறாக, சிந்தனை மற்றும் செயலில் பகுத்தறிவின்மையை ஊக்குவித்து, நம்முடைய குழந்தை களிடம் அதற்கான இணக்கத்தை ஏற்படுத்த முயல்கிறது. நம் குழந்தைகளிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்து, அதனைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக, தெளி வற்ற தன்மையையும், அறிவியலற்ற சிந்தனையையும் அவர்களிடம் மேம்படுத்துவதாகவே இந்த கருத்தியல் இருக் கின்றது. இந்தியாவின் எதிர்காலமான இளைய தலை முறையினரை கைப்பாவைகளாக்கிக் கொள்ளும் வகையில் அவர்களிடமிருந்து இணக்கத்தைப் பெற அது முனைகிறது.

1.1

21ஆம் நூற்றாண்டின் இரண்டாம் கால்பகுதி யில், இந்தியக் கல்வியை இந்த தேசிய கல்விக் கொள்கை எவ்வாறு வடிவமைக்கப் போகிறது என்பது குறித்த கேள்விகள் நம்மிடையே எழுகின்றன. தேசிய கல்விக் கொள்கை கீழே குறிப்பிட்டுள்ளவாறு, அனைத்து மட்டங்களிலும் கல்வியின் தரத்தைக் குறைக்கப் போகிறது. கல்விக்கான வசதிகள் மற்றும் வாய்ப்புகளில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கப் போகிறது. இடஒதுக்கீடு அல்லது பிற ஆதரவளிக்கும் நடவடிக்கைகள் குறித்து அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, குறிப்பாக கிரா மப்புற மக்கள், ஏழைகள், எஸ்சி/எஸ்டி மற்றும் பிற பின்தங்கிய பிரிவினர் கல்வி பெறுவதைக் குறைப்பது மற்றும் கல்விக் கான அனைத்து செலவினங்களையும் அதிகரிப்பதன் மூல மாக, நவீன, உலகளவிலான ஒருங்கிணைந்த அறிவு மற்றும் திறன் சார்ந்த பொருளாதாரம் குறித்த அனைத்து வகையான அறிவு மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும் என்று இந்தியக் குழந்தைகள், இளைஞர்களிடம் உள்ள பேராவல்க ளை நிறைவேற்றிட இந்த கல்விக் கொள்கை தவறியிருக்கிறது. இந்த கல்விக் கொள்கை, மனித வளங்களின் வழங்கல் பக்கத்தை மட்டுமே பார்ப்பதாக இருக்கின்ற நிலையில், வளர்ந்து வருகின்ற நவீன பொருளாதாரத்தில் போதுமான வேலைகள் உருவாக்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். ‘வேலை தேடுபவர்களுக்குப்’ பதிலாக ‘வேலை தரு பவர்களை’ உருவாக்கப் போவதாக கூறுகின்ற பிரதமரின் ‘குழப்பமான’ சொல்லாட்சியும், மாறிவருகின்ற உலகத்திற் கும் அதன் தேவைகளுக்கும் ஏற்றவாறு நமது இளை ஞர்களைத் தயார்படுத்த வேண்டும் என்பது போன்ற  கூற்றுக்க ளும் இருந்து வருகின்ற போதிலும், இறுதியில் பள்ளி மற்றும் உயர்கல்வி என்று இரண்டிலிருந்தும் பெரிய அளவில் மாண வர்கள் வெளியேறுவதிலேயே போய் முடிவடையக் கூடும் என்பதையே தற்போது நிலவி வருகின்ற வேலையின்மை குறித்த திகிலூட்டும் உண்மை நமக்குக் காட்டுகிறது. 

ஆரம்பகால குழந்தைப் பருவ பராமரிப்பு, மேம்பாடு மற்றும்  கல்வி (ECCE)

2

ஆரம்பகால குழந்தைப் பருவ பராமரிப்பு, மேம்பாடு மற்றும் கல்வி மூலமாக, மூன்று முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கல்வியில் மூன்றாண்டுகள் சேர்க்கப்படுவதை தேசிய கல்விக் கொள்கை முன்மொழிகிறது. அறிவாற்றல் வளர்ச்சி மற்றும் கற்றல்  திறன்களுக்கு உதவுவதற்காக விளையாட்டு, செயல்பாடுகள், ஊட்டச்சத்து மற்றும் முறையான பராமரிப்பு மூலமாக, பாது காப்பான மற்றும் அக்கறையுள்ள சூழலில் குழந்தைகளை ஆரம்பப் பள்ளிக்குத் தயார்படுத்த வேண்டும் என்று சர்வதேச விதிமுறைகள் கூறுகின்றன. அதற்காக இந்த கல்வி மற்றும் குழந்தை பராமரிப்பு அமைப்பில் சிறப்பு பங்கை வகிக்கின்ற நிபு ணர்களாக உரிய அங்கீகாரத்துடன், போதுமான பயிற்சிக ளைப் பெற்ற நபர்கள் தேவைப்படுவார்கள்.

2.1

தற்போதுள்ள அங்கன்வாடி அமைப்பு மற்றும் உள்ளூர்த் தொடக்கப் பள்ளிகள் மூலமாக இதனைச் செய்யலாம் என்று தேசிய கல்விக் கொள்கை முன்மொழிகிறது. கிராம மட்டத்தில் அமைந்திருப்பதாலும்,  பெற்றோர்கள் தங்களுடைய குழந்தை களை அங்கே விட்டுவிட்டு, அழைத்துச் செல்வதற்கு வசதியாக  இருப்பதாலும், அங்கன்வாடி பணியாளர்கள் பெற்றோர்களுக் குரிய ஆலோசனைகளை வீட்டிற்கே சென்று வழங்க உத வுவதாலும், இயல்பான மையப்புள்ளியாக அங்கன்வாடிகள் இருப்பது விரும்பத்தக்கதாக இருக்கும். அருகிலுள்ள பள்ளி களில் அவ்வப்போது நேரடியான தொடர்பு வகுப்புகளுடன், மெய்நிகர் கற்றல் தளங்கள் மூலமாக, அங்கன்வாடி தொழி லாளர்களுக்குத் தேவையான தொழில்முறைப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது என்றாலும், அதிகரிக்கப்படும் ஊதியங்கள், மேம்படுத்தப்பட்ட பணி நிலைமைகள் அல்லது அவர்களுடைய தொழில்முறை நிலைக்குப் பொருந்தக்கூடிய வகையிலான புதிய தகுதிகள் பற்றி எதையும் அது குறிப்பிடவில்லை.

2.2

அங்கன்வாடிகளில் ஆரம்பகால குழந்தைப் பருவ பராமரிப்பு, மேம்பாடு மற்றும் கல்விக்குத் தேவையான விளை யாட்டு மற்றும் செயல்பாட்டு பகுதிகள், தேவையான பொருட்க ளுடன் கூடிய போதுமான கூடுதல் வசதிகள் உருவாக்கப்படு வதை உள்ளூர் பஞ்சாயத்துகள் மற்றும் அங்கன்வாடித் தொழி லாளர்கள் உறுதி செய்ய வேண்டும். சுகாதாரம், சுத்தமான குடிநீர், உணவு பாதுகாப்பு மற்றும் தாய்க்குரிய ஆதரவு போன்றவற்றில் கூடுதலான உதவிகள் வீடுகள் மற்றும் சமூகங்களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

பள்ளிக் கல்வி

3

கல்வியானது பொதுப் பட்டியலில் வைக்கப் பட்டிருக்கும் நிலையில், இதுபோன்று அதிரடியாக அதிகரிக்கப்படுகின்ற மத்திய அதிகாரமயமாக்கல் என்பது கூட்டாட்சியையும், மாநிலங்களின் உரிமைகளையும் அழித்து விடுவதாகவே இருக்கும். அந்த நிலையில், இந்தியா போன்ற கலாச்சார ரீதியாக, மொழிமயமாக்கல் ரீதியாக வேறுபட்டிருக்கும் நாட்டில், மத்தியிலிருந்து திணிக்கப்படு கின்ற கொள்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு மாநில அளவிலே கல்வியை வடிவமைப்பதற்கான வாய்ப்புகள், குறிப்பாக பள்ளி அமைப்பில் மாநிலங்களிடம் இல்லாமலே போய் விடும்.ஏற்கனவே வெவ்வேறு மாநிலங்களில், எடுத்துக் காட்டாக மொழிக் கொள்கை தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து எதிர்ப்புகள் எழுவதை நாம் காண்கிறோம்.

3.1

தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பை உருவாக்கி னாலும், பாடப்புத்தகங்கள் மற்றும் பிற பொ ருட்களை உருவாக்குகின்ற அதிகாரத்தை மாநிலங்களிடம் விட்டுச் செல்வதே மிகவும் முன்னேறிய நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகின்றது. அவ்வாறி ருந்து வரும் நிலையில், உள்ளூர் உள்ளடக்கம் மற்றும் தன்மையுடன் கூடிய தேசிய அளவிலான பாடப்புத்தகங்கள் தேவை என்பதாக (பத்தி 4.31) தேசிய கல்விக் கொள்கை கூறு கிறது. இவ்வாறான மத்திய அதிகாரமயமாக்கல் தன்னிச்சை யானதாக, நாடு முழுவதிலும் உள்ள கல்வி முறையை வேறு நோக்கம் கொண்ட நடவடிக்கைகளை நோக்கிச் செலுத்துவ தாக இருக்கிறது. கோவிட் 19 தொற்றுநோயை மேற்கோள் காட்டி மதச்சார்பின்மை, விமர்சன சிந்தனை மற்றும் சில வர லாற்று/அரசியல் முன்னோடிகள் தொடர்பான பாடங்கள்/அத்தியாயங்கள் பாடத்திட்டங்களிலிருந்து அகற்றப்பட்டதை நாம் அண்மையில் கண்டோம்.

4

பள்ளிகளைத் தனியார்மயமாக்குவது ஏற்கனவே வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில், பொ துக்கல்வியை விரிவாக வலுப்படுத்துவது மற்றும் அதற்கு புத்துயிர் அளிப்பதற்குப் பதிலாக, “உண்மையான கொடைக்குணம் கொண்ட நிறுவனங்களால்” (8.4) நடத்தப் படும் பள்ளிகள் என்று கூடுதலான தனியார்மயமாக்க லுக்கான கதவை புதிய தேசிய கல்விக் கொள்கை திறந்து வைக் கிறது. ‘மாற்றுக் கல்விக்கான மாதிரிகளை’யும்  (பத்தி 3.6) தேசிய கல்விக் கொள்கை வழங்குகிறது. அதன் மூலமாக சங் பரிவார் அல்லது அதனுடன் இணைந்த அமைப்புகளுக்கான இடத்தை உருவாக்கித் தருகிறது. உள்ளீடுகள் மற்றும் சுய கட்டுப்பாடு குறித்த தளர்வுகளை அனைத்து அரசு சாரா பள்ளி களுக்கும் (பத்தி 8.5) தேசிய கல்விக் கொள்கை ஏற்படுத்தித் தருகிறது. தவிர்க்க இயலாத வகையில், இவையனைத்தும் சேர்ந்து பொதுக்கல்வி முறையைக் குறைமதிப்பிற்கு உட் படுத்துவதாக இருக்கின்றன. இந்தியாவில் தனியார் கல்வி நிறுவனங்களைப் பாதித்து வருகின்ற பரவலான வணிகமய மாக்கல் மற்றும் ஊழல் குறித்து இந்த தேசிய கல்விக் கொள்கை முற்றிலுமாக விலகி நிற்பதோடு, அவை குறித்த எந்தவொரு விவாதத்தையும் அது கொண்டிருக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ‘இலகுவான ஆனால் இறுக்க மான’ (பத்தி 9.3h) ஒழுங்குமுறை என்ற நிலைப்பாட்டின் மூலம், கல்வியை  சுயகட்டுப்பாடு இல்லாத, இதுபோன்ற விஷயங்க ளைச் சரிசெய்து கொள்வதற்கான மனசாட்சி எதுவுமில்லாத தனியார் நிறுவனங்களிடம் தேசிய கல்விக் கொள்கை விட்டுவிடுகிறது. 

5

‘அனைத்து மட்டங்களிலும் 3 முதல் 18 வயது வரை யிலான அனைவருக்குமான கல்வியை உறுதி செய்வது’ (3.1)  என்ற தெளிவற்ற உத்தரவாதத்தின் மூலமாக கல்வி உரிமைச் சட்டம் - 2009இன் கீழ் நடைமுறை யில் இருந்து வருகின்ற 6 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக் கான கல்வியை வழங்குவதற்கான உறுதிப்பாட்டில் இருந்து விலகிக் கொள்வதை தேசிய கல்விக் கொள்கை முன்மொழி கிறது. பள்ளியிலிருந்து இடைநிற்றல் குறித்த விவாதங்களில், மாணவர் சேர்க்கை மற்றும் பொதுக்கல்வி முறைக்குள் அவர்களைத் தக்கவைத்துக் கொள்வதை உறுதி செய்வதை வலியுறுத்தாமல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் இடைநின்ற பிற மாணவர்களுக்காக ‘சிவில் சமூகத்தின் ஒத்துழைப்புடன் மாற்று, புதுமையான கல்வி மையங்கள்...’ (பத்தி 3.2) என்பது போன்ற தீர்வுகளைப் பரிந்துரைப்பதன் மூலம் அதனைத் தெளிவாக்குகிறது.

5.1

அதேபோன்று, பொதுக்கல்வி முறைக்குள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்குப் பதி லாக, தேசிய மற்றும் மாநில திறந்தநிலைப் பள்ளிகளின் (NIOS/SIOS) மூலமாக மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் உட்பட சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழுவினர் (SEDG) கற்பிக்கப்படுவார்கள் என்று தேசிய கல்விக் கொள்கை முன்மொழிகிறது (3.5). அது இன்னும் கூடுதலான பாகுபாடு மற்றும் டிஜிட்டல் பிளவிற்கே வழிவகுக்கும்.

5.2

செயல்திறன், நீடித்திருக்கும் தகுதி மற்றும் வளமேம்பாடு என்ற பெயரில் ஏராளமான அரசுப் பள்ளிகள், குறிப் பாக  சிறிய அல்லது தனித்திருக்கும் சமூகங்களில் உள்ள பள்ளிகளை மூட வேண்டும் (பத்தி 7) என்று குறிப்பிடுவதன் விளைவாக, பல ஆசிரியர்கள் தங்களுடைய வேலைகளை இழக்க நேரிடும். நீண்ட தூரம் பயணித்து பள்ளிகளை அடைய வேண்டிய தேவை ஏற்படுவதால், அந்தக் குழந்தை களின் கல்வியை அது பாதிக்கும்.

5.3

கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கல்வி ஆணையங்கள் மற்றும் கொள்கைகள் என்று அனைத்துமே அக்கம்பக்க பள்ளிகளை அடிப்படையாகக் கொண்டவையாக, பொது நிதியுதவி பெறும் பொதுப்பள்ளி முறைக்கே ஆதரவு அளித்து வந்தன. அனைத்து வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளிலும் செயல்படுத்தப்பட்ட இந்த அடிப்படை இலக்கை தேசிய கல்விக் கொள்கை 2020 இப்போது முற்றிலுமாக கைவிடுவதாகவே தெரிகிறது.

6

கற்றல் செயல்முறைகள் மற்றும் விளைவுகளை வலியுறுத்துகின்ற நவீனமயமாக்கப்பட்ட நெகிழ் வான கல்வி முறையை ஆதரிக்கும் வகையில், தற்போதுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான  வாரியத் தேர்வுகளைத் தவிர, 3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கும் பொதுவான அகில இந்தியத் தேர்வுகளை தேசிய கல்விக் கொள்கை முன்மொழிகிறது (பத்தி 4.40). அனைத்துப் பாடங்க ளிலும் கூடுதலாக அகில இந்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நடத்தப்படும்; செயல்திறன் மதிப்பீடு, மறுஆய்வு மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான அறிவு பகுப்பாய்வு (PARAKH) (பத்தி 4.41) ஆகியவற்றிற்காக தேசிய மதிப்பீட்டு மையம் என்று அழைக்கப்படுகின்ற மற்றொரு மத்திய அமைப்பு உருவாக்கப் படும். பள்ளி ஆண்டு என்பது செமஸ்டர் வாரியாக, பாடநெறி வாரியாக மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படு கின்ற தேர்வுகளால் நிரப்பப்படுகிறது.இந்த தேர்வுகள் பள்ளி களால் உள்ளூரில் நடத்தப்படுவதில்லை, மாறாக, மாநி லங்கள் அல்லது அகில இந்திய மட்டத்தில் மையப்படுத்தப்பட்ட அதிகார அமைப்புகளால் நடத்தப்படுகிறது.அகில இந்திய மற்றும் மாநில வாரியங்களின் பங்கு இதன் மூலம் கேள்விக் குள்ளாக்கப்படுகிறது.இந்த ‘தேர்வு ராஜ்யம்’, தேசிய கல்விக் கொள்கை 2020 முன்வைக்கின்ற முழு வாதத்திற்கும் எதிரா கவே இயங்குகிறது. மேலும் இந்த கொள்கையில் உள்ளார்ந்து இருக்கின்ற தாறுமாறான, சுயமுரண்பாடான சிந்தனைகளை அது  அம்பலப்படுத்தவும் செய்கிறது. 

6.1

இந்திய சமூகம் மற்றும் கலாச்சாரம் குறித்து சங்பரிவாரிடம் இருக்கின்ற முன்னோக்கை நோக்கிய உறுதியான உந்துதலை இந்த தேசிய கல்விக் கொள்கை செய்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, விமர்சன சிந்தனை, அறிவியல் மனப்பான்மை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை ஊக்குவிப்பதாக இந்த தேசிய கல்விக் கொள்கை பேசினாலும், மதச்சார்பின்மை என்ற சொல் ஒருமுறை கூட அதில் குறிப்பிடப்படவே இல்லை. பழங்குடி மற்றும் சுதேசிய அறிவை ஏற்றுக் கொள்ளும் வகையில் “மண்சார்ந்த விளையாட்டுக்கள்” உட்பட குறிப்பி டப்படாத “இந்திய அறிவு அமைப்புகள்” குறித்து கற்பிக்கப் படும் (பத்தி 4.27) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திராவிட, ஆதிவாசி மற்றும் வடகிழக்கில் உள்ள பிற மொழி குழுக்களை முற்றிலும் புறக்கணித்து விட்டு, “சமஸ்கிருதத்திலிருந்து தொ டங்குகின்ற… அவற்றின் பொதுவான தோற்றம் மூலமாக பெரும்பாலான முக்கிய இந்திய மொழிகளிடம் குறிப்பிடத் தக்க ஒற்றுமை” (பத்தி 4.16) இருப்பதாக கூறுகிறது. 6 முதல் 8 வகுப்புகளுக்கான மொழிக் கல்வி குறித்து சொல்லும் போது, தேசியக் கல்விக் கொள்கை ஒரே தேசம், ஒரே மொழி என்ற சங்பரிவார் சிந்தனையை முன்னிறுத்துகின்ற வகையில் வலியுறுத்திப் பேசுகிறது. இந்தியாவின் பழமையான மற்றும் பிற இந்திய மொழிகளில் உள்ள இலக்கியம் மற்றும் கலாச்சாரம் (பத்தி 4.18) பற்றி குறிப்பிடும் போது, பாலி, பிரகிருதம் மற்றும் பாரசீக மொழிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள் ளது. ஆனால் ஆச்சரியப்படும் வகையில், இந்த தேசிய கல்விக் கொள்கையில் உருது பற்றி எதுவும் குறிப்பிடப்படவே இல்லை!

ஆசிரியர் கல்வி

7

குறிப்பாக பொதுக்கல்வி முறையில், பழங்குடி மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பள்ளி களில் தகுதிவாய்ந்த, பயிற்சி பெற்ற ஆசிரியர்க ளின் பற்றாக்குறை நன்கு அறியப்பட்டிருப்பதை தேசிய கல்விக் கொள்கை - 2020 அங்கீகரித்துள்ளது என்றாலும், போதுமான அளவிற்கு அதன் மீது கவனத்தைச் செலுத்த வில்லை. சில மாநிலங்களில், கல்வி உரிமைச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு தொழில்முறைப் பயிற்சி பெறாத பல ஆசிரியர்கள் உள்ளனர். தேசிய கல்விக் கொள்கையில் உள்ள ‘பள்ளி வளாகங்கள்’ என்ற நடைமுறைக்கு மாறாக உள்ள, நம்ப முடியாத கருத்து, பள்ளிகளுக்கு இடையில் ஆசிரியர்க ளைப் பகிர்ந்து கொள்வது போன்றவற்றைத் தவிர (பத்தி 5.5), இந்த சிக்கலுக்கான தீர்வு எதுவும் இந்தக் கொள்கையில் வழங்கப்படவில்லை. பள்ளி ஆசிரியர்களை பரவலாக இடம் மாற்றுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான உத்தரவாதம் வழங்கப்படுகிறது என்றாலும், அதற்கு மாநிலங்களின் முழு ஒத்துழைப்பு தேவைப்படும்.ஆனால் இந்த தேசிய கல்விக் கொள்கையில் மாநிலங்கள் முற்றிலுமாக ஓரங்கட்டப் பட்டுள்ளன.

8

அடிப்படைக் கல்வியிலிருந்து உயர்நிலைக் கல்வி வரை அனைத்து மட்ட கல்விகளுக்கும் விரிவு படுத்தப்பட உள்ள மையப்படுத்தப்பட்ட ‘தேர்வுகள் ராஜ்யம்’ தேசிய கல்விக் கொள்கையில் உள்ள ஆசிரியர் தகுதி சோதனைகளுக்கான (TET) (பத்தி 5.4) ஏற்பாட்டில் தெளி வாகத் தெரிகிறது.
 

9
மழலைக் கல்வி தொடங்கி 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து ஆசிரியர்களுக்கும் ஏதாவதொரு சிறப்பு பாடத்திட்டத்துடன் நான்காண்டு ஒருங்கிணைந்த பி.எட் பட்டங்கள் (பத்தி 15.5) தேவைப்படும் என்று குறிப்பிடுவது மிகவும் சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளது. முன்னதாக, 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கான ஆசிரியர்கள் பி.எல் எட் (தொடக்கக் கல்வி இளங்கலை) பட்டம், 9-10 வகுப்புகளுக்கான ஆசிரியர்கள் இரண்டு ஆண்டு பி.எட் பட்டம், 11-12ஆம் வகுப்புகளுக்கான ஆசிரியர்கள் முதுகலை பட்டம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதாக இருந்தது. அந்த நடைமுறை ஒவ்வொரு கட்டத்திலும் குறிப்பிட்ட தேவைகளை நிறைவு செய்ய உதவுவதாக இருந்தது. தேசிய கல்விக் கொள்கையின் கீழ், நான்கு ஆண்டு பட்டம் பெற்றிருக்கும் பட்டதாரிகள் ஓராண்டு படிப்பையும், மூன்றாண்டு பி.ஏ. பட்டம் பெற்றவர்கள் இரண்டு ஆண்டு படிப்பையும் படிக்கலாம் என்றிருப்பது, கற்பித்தல் திறன்களில் முழு அளவிலான பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதைக் காட்டிலும், முன்பே பெற்றிருக்கும் கல்வித் தகுதிகளுக்குத் தேவையற்ற முன்னுரிமையைத் தருகின்ற வகையிலேயே இருக்கின்றது. இறுதியாக 2 வாரங்கள் முதல் 3 மாதங்கள் வரையிலான குறுகிய கால படிப்புகளை மட்டும் மேற்கொள்கின்ற, போதுமான கல்வித் தகுதிகள் உள்ள அல்லது இல்லாத எந்தவொரு நபரும் ’தன்னார்வ/பகுதிநேர/உதவி ஆசிரியர்கள்’ ஆகலாம் என்று கூறுவது, ஆசிரியர்களின் தரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தி, வணிகமயமாக்கலுக்கான ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலானதாகவே இருக்கின்றது. 

10
 ஆசிரியர்களுக்கான இணையவழி பயிற்சிக்காகப் பரிந்துரைக்கப்படுகின்ற ஸ்வயம்/தீக்சா திட்டங்கள், முற்றிலும் ஒரு வாய்ப்பாகவே (பத்தி 15.10) கருதப்படுகின்றன. குறிப்பாக கிராமப்புற, பழங்குடி மற்றும் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த ஆசிரிய-பயிற்சியாளர்களைப் பொறுத்தவரையில் இருக்கின்ற டிஜிட்டல் பிரிவை அது முற்றிலுமாகப் புறக்கணிக்கின்றது. மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான அணுகலில் இருக்க வேண்டிய சமவாய்ப்பை பாதிக்கவும் செய்கின்றது.

11
 சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழுவினர் மற்றும் பிற சிறப்புத் தேவை மாணவர்களைப் பொறுத்தவரை, ஆசிரியர் பயிற்சிக்கான ஏற்பாடுகள் குறித்து இந்த தேசிய கல்விக் கொள்கை போதுமான அளவிற்கு குறிப்பிடவில்லை என்பதால், சம்பந்தப்பட்ட மாணவர் குழுக்களை அது நிச்சயமாகப் பாதிக்கும். சிறப்புக் கல்வி ஆசிரியர் பயிற்சி குறித்து முறையான வழியில் தேசிய கல்விக்கொள்கை எதுவும் குறிப்பிடவில்லை என்பது கவலையளிப்ப தாக இருக்கிறது.

வாழ்க்கைத் தொழிற்கல்வி

12
இளைஞர்கள் திறன்களைப் பெறுவது மற்றும் தொடர்புடைய கருத்துகள் மற்றும் அறிவிற்கான கல்வியைப் பெறுவது என்பதற்கான பொருள் என்ன என்பது குறித்த பழமையான கருத்துக்களில் இந்திய வாழ்க்கைத் தொழிற்கல்வி நீண்ட காலமாக மூழ்கி கிடக்கிறது. உற்பத்தி மற்றும் சேவைகளில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் நிறுவன மாற்றங்களுடனான நவீன பொருளாதாரத்தில் இன்னும் அதிக அளவிலான முக்கியத்துவத்தை இக்கல்வி பெறுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து வருகின்ற சாதி மற்றும் வர்க்க பேதங்களால் நிறைந்துள்ள இந்தியச் சமூகத்தில், நடுத்தர வர்க்கங்கள்/உயர் சாதியினர் கல்வியறிவைப் பெற்ற அதே சமயத்தில், முந்தைய தலைமுறையினரிடமிருந்து பெறப்பட்ட திறன்-பயிற்சிகளே கீழ்நிலை வகுப்புகள்/சாதிகளுக்குக்கிடைத்தன. அத்தகைய கருத்தியல் கட்டமைப்பே இன்றுவரை நீடித்து வருகிறது, கல்வி அமைப்பு முறைக்கும், திறன் அமைப்பு முறைக்கும் இடையில் ஒரு மெய்நிகர் ‘தடுப்புச்சுவர்’தொடர்ந்து இருந்து வருகிறது. மேம்பட்ட திறன்கள் மட்டுமல்லாமல், தொடர்புடைய அறிவு நிலைகளும் தொழிலாளர்களுக்குத் தேவைப்படுகின்ற நவீன தொழில்துறைப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை அது பொருத்தமற்றதாகவே இருக்கிறது. சீனாவில் 55%, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தென்கொரியாவில் 80-85%, ஜப்பானில் 90%க்கும் அதிகமானவர்கள் என்ற நிலைமையோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் உள்ள தொழிலாளர் எண்ணிக்கையில் சுமார் 2% பேர் மட்டுமே முறையான பயிற்சி பெற்றவர்களாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள், பள்ளிக் கல்விக்குப் பிறகு கல்லூரிக் கல்வியின் ஒரு பகுதியாக அல்லது இடைநிலைக் கல்வியை முழுமையாக முடித்த பின்னர் அல்லது அந்த அளவில் சில குறைந்தபட்ச நிலைகளைச் சாதித்த பிறகே தொழிற்கல்வியைக் (VocEd) கருத்தில் கொள்கின்றன என்பதே, மேம்பட்ட அனுபவம் வாய்ந்த தொழில்துறைப் பொருளாதாரங்கள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ‘வளர்ந்து வரும்’ பொருளாதாரங்கள் ஆகிய இரண்டிலிருந்தும் கிடைத்திருக்கும் சர்வதேச அனுபவமாக இருக்கிறது. இப்போது வரையிலும், இடைநிற்றலைத் தடுப்பதற்குப் போதுமானதாக இல்லாத,  பள்ளியில் +2 கட்டத்தில் நுழைவு நிலையில் வழங்கப்படுகின்ற தொழில் திறன், மற்றும் பலவீனமான ஐ.டி.ஐ கட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையிலேயே இந்தியா ஊசலாடிக் கொண்டுள்ளது. 

13
 பல சிக்கல்கள் இருந்த போதிலும், தேசிய கல்விக்கொள்கை - 2019 வரைவறிக்கை சிறந்த திசையில் நகர்ந்ததாகத் தெரிந்தது. ஐ.டி.ஐ.க்கள், தொழில் மற்றும் பிற நடைமுறை பயிற்சி மையங்களுடன் இணைந்து உயர்கல்வி நிறுவனங்களில் பல்வேறு நிலைகள் மற்றும் கால அளவுகளைக் கொண்ட தொழிற்கல்வி (VocEd) படிப்புகள்வழங்கப்படும் என்று அது பரிந்துரைத்திருந்தது. தேசிய கல்விக் கொள்கை இப்போது அதன் திசையை மாற்றியமைத்துள்ளது. வரைவறிக்கையில் இருந்ததைப் போல, எந்த விவரங்களையும் கல்விக் கொள்கை வழங்கிடவில்லை. தொழிற்கல்வியானது அனைத்து இடைநிலைப் பள்ளிகள் வழங்குகின்ற கல்வியுடன் வெவ்வேறு நிலைகளில் முழுமையாக ஒருங்கிணைக்கப்படும் (பத்தி 16.5) என்றும்,  அதன் முடிவில், ஐடிஐக்கள்,பாலிடெக்னிக்குகள், உள்ளூர் தொழிற்துறை நிறுவனங்களுடன் இடைநிலைப் பள்ளிகள் இணைந்து இயங்கும் என்றும் தேசிய கல்விக்கொள்கை குறிப்பிடுகிறது. இது பலவகைகளில் மிகவும் பிற்போக்கான நடவடிக்கையாகவே இருக்கிறது.

13.1
 பெரும்பாலான நவீன நாடுகளில்  தகுதி வாய்ந்த திறமையான தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், அதிகாரம் பெற்ற குடிமக்களுக்கும் அவசியம் என்று கருதப்படுகின்ற முழுமையான இடைநிலைக் கல்வியை குழந்தைகள் பெறுவதை, பத்தாம் வகுப்பிற்குப் பிறகான இடைநிற்றலை மறைமுகமாக ஏற்றுக் கொள்கின்ற தேசிய கல்விக் கொள்கை தடுக்கிறது. அங்கே குறைந்த, நுழைவு நிலை அளவிலே பெறப்படுகின்ற திறன்கள் நிஜவாழ்க்கையில் உள்ள  தொழில்துறை அல்லது சேவைத்துறை வேலைகளுக்குப் போதுமானதாக இருக்கவில்லை. 

13.2
 ஒன்பதாம் வகுப்பிலிருந்து வெவ்வேறுநவீன வர்த்தகங்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் துறைகளில் வெளிப்பாடு மற்றும் அடித்தள அளவிலான திறன்களை மாணவர்கள் பெற வேண்டும் என்றாலும், அவை வெறுமனே அறிமுகமாக மட்டுமே இருந்து, பல்வேறு விருப்பங்களை மாணவர்கள் ஆராய்வதற்கு உதவுகின்றன. இருந்த போதிலும், தொழில்முறை வேலை சார்ந்த திறன்கள் மற்றும் ஈடான கல்லூரிக் கல்வி ஆகியவற்றை பள்ளிக்குப் பிறகுதான் பெற முடியும்.

13.3
 கூடுதல் பொறுப்புகள், போதுமான திறன்கள், அனுபவம் மற்றும் தகுதிகள் கொண்ட புதிய ஆசிரியர்களுக்கான தேவைகளையும், பல்வேறு வர்த்தகங்கள்/தொழில்களுக்குத் தேவையான உபகரணங்கள்/இயந்திரங்களைக் கொண்ட மிகவும் விலையுயர்ந்த உள்கட்டமைப்பையும் ஏற்கனவே அழுத்தத்தில் இருந்து வருகின்ற பள்ளி அமைப்பின் மீது இந்த திட்டம் சுமத்துகிறது. திறமை மற்றும் அறிவைப் பூர்த்தி செய்கின்ற வகையில் விரும்பிய இலக்குகளை அடைவதற்கான நடைமுறை சாத்தியமின்மை காரணமாக, அது தோல்வியுறவே போகிறது.

உயர் கல்வி 

14
 இந்திய உயர்கல்வி ஏற்கனவே தனியார்மயமாக்கல் என்ற பாதையில் சென்றுவிட்டது. 2018-19ஆம் ஆண்டில் கல்லூரி மாணவர் சேர்க்கையில் சுமார் 45% அரசு உதவி பெறாத தனியார் கல்லூரிகளிலும், 21% அரசு உதவி பெறும் தனியார் நிறுவனங்களிலும் இருந்தன.தொழில்முறை சார்ந்த படிப்புகளில், இளங்கலை பட்ட வகுப்பு மாணவர்களில் 72.5%, முதுகலை மாணவர்களில் 60% என்று அரசு உதவி பெறாத தனியார் நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை உள்ளது.பல பொதுக்கல்வி நிறுவனங்களும் கூட, குறிப்பாக தொழில்முறை படிப்புகளில், கட்டணத்தைக் கணிசமாக அதிகரித்துள்ளதை நாம் காண்கிறோம். பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் ஐந்தில் நான்கு பங்கு என்ற அளவிற்கு மேல் என்று பொதுக்கல்வி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்ற போதிலும், அங்கேயும் நிலைமைகள் மிகவேகமாக மாறி வருகின்றன. 2014-15 மற்றும் 2018-19க்கு இடைப்பட்ட காலத்தில், பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையின் மொத்த அதிகரிப்பில் 55 சதவீதம் தனியார் பல்கலைக்கழகங்களிலும், 33 சதவீதம் பொது திறந்த பல்கலைக்கழகங்களிலும் (வழக்கமான மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தேக்கமடைந்து அல்லது குறைந்து விட்டிருக்கிறது) நடைபெற்றிருக்கிறது. தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பிற உயர்கல்வி நிறுவனங்கள் காளான்கள் போன்று பெருகியுள்ளன. அவற்றில் பல மிகவும் மோசமான வசதிகள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக தொழில்முறை மற்றும் தொழில்நுட்பப் பாடங்களில், அவை பல்வேறு தலைப்புகளின் கீழ் கட்டுப்பாடுகளற்ற அளவில் அதிகக் கட்டணங்களை வசூலித்து வருகின்ற போதிலும், அவற்றால் நல்ல தகுதியான, பயிற்சி பெற்ற பட்டதாரிகளை உருவாக்குவதை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை. மறுபுறம், பொது பல்கலைக்கழகங்கள் கற்பிப்பதற்கான நிதிக்கேபட்டினி கிடந்து வருகின்ற நிலையில், ஆராய்ச்சிகளை மேற்கொள்வது பற்றி என்ன சொல்வது?எனவே கட்டணங்களை உயர்த்துவது அல்லது வணிகமயமாகும் நிலைக்கு அவை தள்ளப்படுகின்றன. எவ்வாறாயினும், இந்த பிரச்சனைகள் தொடர்பாக, எந்தவொரு தீர்வையும் தேசிய கல்விக் கொள்கை - 2020 கொண்டிருக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், தன்னுடைய உயர்ந்த சொற்றொடர்களாலும், பூவைப் போன்ற மிருதுவான மொழியாலும் தனியார்மயமாக்கல், வணிகமயமாக்கல், சமத்துவமின்மை மற்றும் தரம் குறித்த பெரும் சிக்கல்களை மேலும் அதிகரிக்கச் செய்கின்ற ஒரு மாதிரியையே முன்மொழியவும் செய்திருக்கிறது.

15
உயர்கல்வி அமைப்பில் உள்ள ஆழமான ஏற்றத்தாழ்வு மற்றும் ஏழைகள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினர், பெண் குழந்தைகள்மற்றும் விளிம்புநிலை  பிரிவினருக்கான அணுகல் இல்லாமை போன்றவற்றை அங்கீகரிக்காமல் இருப்பது, இந்த தேசிய கல்விக் கொள்கையில் மிகவும் கவனிக்கத்தக்க அம்சமாக இருக்கிறது. 

15.1
 முழு ஆவணத்திலும் இடஒதுக்கீடு என்ற சொல் ஒருமுறை கூட இடம்பெறவில்லை. உயர்கல்வியில் உள்ள முக்கிய சிக்கல்களைப் (பத்தி 9.2) பகுப்பாய்வு செய்யும் போது, ‘வரையறுக்கப்பட்ட அணுகல். சமூக-பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பகுதிகளில், உள்ளூர்மொழிகளில் கற்பிக்கும் சில உயர்கல்வி நிறுவனங்களுடன்’ என்று தேசிய கல்விக் கொள்கை குறிப்பிடுகிறது என்றாலும், வேலைவாய்ப்பில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய, இந்திய உயர்கல்வியைப் பாதிக்கும் வெளிப்படையான கட்டமைப்பு சமத்துவமின்மை பற்றி எதையும் குறிப்பிடவில்லை.

15.2
 உயர்கல்வி நிறுவனங்களில் நுழைவது தேசிய தேர்வு முகமையால் (4.42) நடத்தப்படும் புதிய நுழைவுத் தேர்வின் அடிப்படையிலும் இருக்கும் என்றாலும், தனிப்பட்ட உயர்கல்விநிறுவனங்கள் தாங்கள் விரும்புகின்ற வேறு எந்த அளவுகோல்களுடனும் இந்த மதிப்பெண்களைச் சேர்த்து பயன்படுத்தும் சுதந்திரம் கொண்டவையாக இருக்கும். இன்றுவரையிலும் தகுதி அடிப்படையிலான அமைப்புகள் என்று நன்கு அறியப்பட்ட அமைப்புகள் இருந்து வருகின்ற நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகள் எஸ்சி/எஸ்டி மற்றும் பிற பின்தங்கிய பிரிவினரின் வாய்ப்புகளை மேலும் பாதிப்பதோடு, அவர்களை உயர்கல்வியிலிருந்து விலக்கி வைக்கின்ற நடைமுறைகளை வலுப்படுத்தவே செய்யும்.

15.3
 தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் அதிக கட்டணம் விதிப்பவையாக மாறியிருக்கின்ற நிலையில், பொது உயர்கல்வி நிறுவனங்களும் பெரும்பாலான இந்தியர்களிடம்இருக்கின்ற கட்டணம் செலுத்தும் திறனைத் தாண்டி கட்டணங்களை உயர்த்தியிருக்கின்றன. இந்த நிலையில், மிகமுக்கிய அம்சமாக, சமமான அணுகல் மற்றும் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை (GER) (பத்தி 12.5-12.6) அதிகரிப்பதற்கான முக்கிய கருவியாக திறந்தநிலை கற்றல் முன்வைக்கப்படுகிறது. இதன் விளைவாக உயர்கல்வியிலிருந்து படிப்படியாக ஏழைகள் வெளியேற்றப்படுவார்கள்; திறந்தநிலை கற்றல் மூலம் பெற்ற பட்டங்களுடன் அவர்கள் போராட வேண்டி வரும். ஏற்கனவே உயர்கல்வியில் மிகக் குறைவான எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கையைக் கொண்டிருக்கும் இந்தியாவை, மற்ற நடுத்தர வருமான நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகமோசமான நிலைக்கு அது தள்ளி விடும். 

15.4
 உரிய விவரங்கள் அல்லது அரசாங்க ஆதரவிற்கான உத்தரவாதங்கள் எதுவும் இல்லாமல் இலவசங்கள்/உதவித்தொகைகள் என்பதாக இருக்கின்ற மற்ற முன்மொழிவுகள், புதிய கண்டுபிடிப்பு வார்த்தையாக இருக்கின்ற சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழுக்களின் சமூக-பொருளாதார பற்றாக்குறை அல்லது பிற குறைபாடுகளை ஈடுசெய்வதற்கான தெளிவற்ற வாய்ப்புகளாகவே இருக்கின்றன. குறிப்பிட்ட உத்தரவாதங்கள் எதுவும் இல்லாமல்.‘தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான இலவசங்கள் மற்றும் உதவித்தொகைகளை வழங்குமாறு ஊக்குவிக்கப்படும்’ என்று (பத்தி 12.10) தேசிய கல்விக் கொள்கையும் கூறுகிறது.

16
 பல்கலைக்கழகங்களுடன் இணைவிக்கப்பட்டுள்ள கல்லூரிகளை நீக்கிவிட்டு, துறைகளுக்கு அப்பாற்பட்டு பிற பிரிவுகளில் படிப்புகளை வழங்குகின்ற மிகப்பெரிய அளவிலான பல்துறை சார்ந்த பல்கலைக்கழகங்கள் அல்லது உயர்கல்வி நிறுவனங்களை நோக்கி நகர்வது,பட்டம் வழங்க அதிகாரம் உள்ள தன்னாட்சி கல்லூரிகளை நிறுவுவது என்று உயர்கல்வி குறித்து பெரிய அளவில் தேசிய கல்விக் கொள்கையின் முன்மொழிவுகள் உள்ளன.

16.1
 இவ்வாறான நடவடிக்கைகளின் நடை முறை மற்றும் அளவுகள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங் களுடன் இணைக்கப்பட்டுள்ள பல கல்லூரிகளை மூடுவது, கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு எட்டாத தொலைவிலேயே இருக்கின்ற பெரிய அளவிலான புதிய உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்குவது போன்றவை, மாணவர்களுக்கு  மேலும் செலவுகளை அதிகரித்து, எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும். ஐ.ஐ.டி, மருத்துவக் கல்லூரிகள் போன்ற சிறப்பு தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களை இதேபோன்று மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விசித்திரமான ஆலோசனையையும் தேசிய கல்விக் கொள்கை முன்வைக்கிறது! இந்த திட்டத்தில் இன்னும் இதுபோன்ற பல முக்கியமான சிக்கல்கள் உள்ளன.

16.2
 பல்துறை சார்ந்த உயர்கல்வி   நிறு வனங்கள் சான்றிதழ், டிப்ளமோ, மேம்பட்ட டிப்ளமோ மற்றும் பட்டங்களுடன் ஒவ்வொரு ஆண்டும் நுழைந்து, வெளியேறக் கூடிய வகையில் நான்கு ஆண்டு இளங்கலை படிப்புகளை வழங்கும். இவ்வாறு பல நுழைவு வழிகளை வழங்குவதை, வாழ்நாள் முழுவதும் கற்றலை ஊக்குவிப்பதாக, தொழில்துறையில் சில காலம் இருந்த பிறகு பக்கவாட்டு நுழைவை எளிதாக்குகின்ற நடவடிக்கையாகப் புரிந்து கொள்ளலாம் என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் சான்றிதழ் அல்லது டிப்ளமோக்களை வழங்குவதில் அர்த்தம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அத்தகைய நிலைப்பாட்டுடனான தொகுதிகளைக் கொண்டு இளங்கலை பாடத்திட்டத்தை வடிவமைக்க முடியாது. பல நாடுகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் வாழ்க்கைத் தொழிற்கல்வியுடன் இணைக்கப்பட்டுள்ள குறுகிய கால சான்றிதழ்/டிப்ளமோ படிப்புகளை வழங்கி வருகின்றன. குறிப்பிட்ட மட்டத்தில் குறிப்பிட்ட தேசிய திறன் தகுதி கட்டமைப்பு தரங்களை வெவ்வேறு நிலைகளில் பூர்த்தி செய்யும் வகையிலே அந்த படிப்புகள் அங்கே வடிவமைக்கப்பட்டுள்ளன. இளங்கலை படிப்புகள் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை என்பதால், அந்த வழியில் அவற்றால் செயல்பட முடியாது.கல்விக் கொள்கை முன்வைக்கின்ற அத்தகைய கட்டமைப்பானது கல்வியின் உள்ளடக்கம் மற்றும் அந்தப் பட்டத்தின் மதிப்பை குறைக்கவே செய்யும்.

16.3
 தேசிய அளவில் அமைக்கப்பட்ட கட்டமைப்பிற்குள், ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் தனது துறைகள்/படிப்புகள் முழுவதற்குமான சொந்த பாடத்திட்டங்களை வடிவமைத்துக் கொள்ளும் என்று தேசிய கல்விக் கொள்கை முன்மொழிந்து, உயர்கல்வியை தாராள சந்தையில் கிடைக்கும் பொருளாக மாற்றுகிறது. வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களில் நாட்டிற்காக அடையாளம் காணப்பட்ட கல்வித் தேவைகள் அல்லது பொருளாதாரத்திற்கான மனிதவளத் தேவைகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த மாநில வழிகாட்டலுக்கான எந்த திட்டமும் கொள்கையில் இருக்கவில்லை. சந்தை சமிக்ஞைகளால் வழிநடத்தப்படுகின்ற தனிப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களின் மெய்யறிவிடமே இவையனைத்தும் விடப்படுகின்றன.

16.4
 தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பரவலாக இதே முறையே பின்பற்றப்படுகிறது, படிப்புகள், பாடத்திட்டங்கள் போன்றவற்றைத் தீர்மானிப்பதில் தேசிய அறிவியல் அல்லது தொழில்துறை முன்னுரிமைகளுடன் எந்தவொரு தொடர்பும் இல்லை என்ற கூடுதல் பலவீனமும் இந்த கல்விக் கொள்கைக்குள் இருக்கிறது. 

16.5
 தங்களது சொந்த பட்டங்களை வழங்குவதற்கான அதிகாரம் பெற்ற கல்லூரிகளுக்கு வழங்கப்படுகின்ற தரப்படுத்தப்பட்ட தன்னாட்சியானது, இதுவரை தன்னாட்சி கல்லூரிகளுடனான அனுபவம் காட்டியுள்ளவாறு, அதிக தனியார்மயமாக்கல், அதிக கட்டணம் மற்றும் குறுகிய கால படிப்புகளை வழங்குவதற்கான சுதந்திரம், மேலும் கூடுதலாக உயர் கல்வியை வணிகமயமாக்கல் என்பதாகவே பொருள்படும். 

17
உயர்கல்வி நிறுவனங்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்குமுறை கட்டமைப்புடன் மேற்கண்ட திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தேசிய கல்விக் கொள்கையின் பொதுவான பார்வையானது இலகுவான ஆனால் இறுக்கமான’ கட்டமைப்பிற்காக குரல்கொடுக்கிறது. பாடத்திட்டங்கள், கட்டணங்கள், பாடநெறி கட்டமைப்புகள், ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் போன்ற அனைத்தும் ‘இலகுவாக’ கட்டுப்படுத்தப்பட்டு, உண்மையில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல், உயர்கல்வி நிறுவனங்களிடமே முழுமையாக விட்டுவிட்டு, பரந்தகல்வி கட்டமைப்பையும், மதிப்பீட்டு முறைகளையும் அமைத்து,அவற்றை ‘இறுக்கமாக’ கண்காணிப்பது என்றே அது பொருள்படுகிறது. உயர்கல்வியைப்  பெருநிறுவனமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் வணிகமயமாக்கலுக்கு உட்படுத்துவதற்கான  திறந்த அழைப்பாகவே அது அமைந்திருக்கிறது. 

17.1
 பல்கலைக்கழகத்தின் அனைத்து விவகாரங்களிலும் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் தன்னுடைய சொந்த ஆளுநர் குழுவை ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும், கார்ப்பரேட் கட்டமைப்புகளுடனான ஒற்றுமையுடன், தன்னிச்சையாக உருவாக்கிக் கொள்ளும் என்று தேசிய கல்விக் கொள்கையின் திட்டத்தில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. 

17.2
 தனிப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் சொந்த நிதியை  ‘கொடை யுள்ளம் கொண்ட’ (கார்ப்பரேட் என்று படிக்கவும்) மூலங்களிடமிருந்து திரட்டிக் கொள்ள வேண்டும். அரசாங்க வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டதாக, அதாவது கட்டணம் நிர்ணயிக்கும் முறையானது நியாயமான செலவைமீட்டெடுப்பதை உறுதி செய்கின்ற வகையில் இருக்குமாறு, தங்களது சொந்த கட்டணக் கட்டமைப்புகளை நிர்ணயித்துக் கொள்ளும்  சுதந்திரம் அவற்றிற்கு உண்டு. மின்சார விநியோகம், விமான நிறுவனங்கள் போன்று பொருளாதாரத்தின் மற்ற அனைத்து துறைகளிலும் பின்பற்றப்பட்டு வருகின்ற அதே செயல்முறையையே, இங்கே ஒழுங்குமுறை என்ற பெயரில் ஏற்படுத்தித்தந்து, கார்ப்பரேட்டுகளுக்கு நல்ல வருவாயை உறுதிசெய்து தருகின்ற வசதியாளராக மட்டுமே அரசு செயல்படப் போகிறது. 

17.3
 இவ்வாறான ஒழுங்குமுறை கட்டமைப்பானது, தரங்கள் குறித்து இலகுவான ஒழுங்குமுறைகளையே அரசாங்கம் பயன்படுத்தப் போகிறது என்பதையே குறிக்கிறது.அத்தகைய தரங்களை நிறைவேற்ற உதவுகின்ற வகையில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதியளிப்பதில் எந்தப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்காது. உயர்கல்வி நிறுவனங்களுக்கு எந்த வகையில் நிதியளிக்க முன்மொழியப்பட்டுள்ளது, பொது உயர்கல்வி நிறுவனங்களுக்கு பொது நிதிகள் மீது ஏதேனும் சிறப்பு சலுகை கிடைக்குமா அல்லது கொள்கையில் வாக்குறுதியளிக்கப்பட்டு இருக்கும் வகையில், அனைவருக்கும் சமமான தளம் என்பது இந்த நிதிகளுக்கும் பொருந்துமா என்பது பற்றி தேசிய கல்விக் கொள்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. போதுமான அரசு நிதி கிடைக்கவில்லையென்றால், வணிகமயமாக்கல் மற்றும் சமத்துவமான  அணுகல் இல்லாமை போன்ற அனைத்து விளைவுகளையும் கொண்ட தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் விதிமுறைகளையே பொது உயர்கல்வி நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகும்.  

18
தேசிய கல்விக் கொள்கையில் முன்மொழியப் பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளிலும் அதிகப்படியான மையமயமாக்கல் உள்ளது. செயலாக்கத்தைத்தவிர. மாநில அரசுகளுக்கு உயர்கல்வியில் சிறிதளவு பங்கு அல்லது பங்கே இருக்கவில்லை என்ற நிலை மட்டுமே இருக்கிறது.

18.1
 உச்சத்தில் உயர்கல்வி மன்றத்துடன் (எச்.இ.சி.ஐ), ஒழுங்குமுறைக்கான தேசிய உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம்,  அங்கீகாரத்திற்கான தேசிய அங்கீகார ஆணையம், மானியங்களுக்கான உயர்கல்வி மானியக் குழு மற்றும் விளைவிற்கான தரங்களை வடிவமைப்பதற்கான பொது கல்வி ஆணையம் ஆகியவற்றுடன் இன்னும் பல மத்திய நிறுவனங்களை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. விளைவுகள் குறித்த மதிப்பீடு மத்தியிலேயே செய்யப்படும்.அது மதிப்பீடுகள், அங்கீகாரம் மற்றும் நிதி ஆகியவற்றை நன்கு தீர்மானிப்பதாகவும் இருக்கும். இந்த நிறுவனங்களுக்கென்று கல்வியாளர்கள் மற்றும் புகழ்பெற்ற நபர்கள் தேர்வு செய்யப்படுவது குறித்து அதிகம் பேசப்பட்டாலும், அந்த நிறுவனங்களின் மீதான அரசாங்கத்தின் கடுமையான ஆதிக்கம் வெளிப்படையானதாகவே உள்ளது. 

18.2
 உயர்கல்வி நிறுவனங்களுக்குள் நுழைவதற்கான தேசிய தேர்வும், மத்திய நிறுவனம் ஒன்றால் நடத்தப்படும். அந்த தேர்விற்கான மதிப்பு கேள்விக்குறியாக இருந்தாலும், உயர்கல்வி நிறுவனங்கள் இந்த தேர்வுகளின் முடிவுகளை மாணவர் சேர்க்கைக்குப் பொருத்தமாகக் காணும் விதத்தில் பயன்படுத்துவதற்கான சுதந்திரம் கொண்டவையாக இருக்கும். மாநில வாரியங்களின் பொருத்தப்பாடு, அவர்கள் நடத்தி வந்த தேர்வுகள் இனிமேல் கேள்விக்குரியவையாகி விடும்.மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற மாநில அளவிலான உயர்கல்வி நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து தேசிய கல்விக் கொள்கை கவனம் செலுத்தவில்லை.மத்திய அரசின் கீழ் செயல்படப் போகும் இந்த மத்திய நிறுவனங்களாலேயே நாட்டின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் நிர்வகிக்கப்படும் என்பதையே இது தெளிவாகக் குறிக்கிறது.

19
 தனியார்மயமாக்கப்பட்ட மற்றும்   பெருநிறுவனமய மாக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் என்றிருக்கின்ற இந்த புதிய தாராளமய தளத்தில், இந்தியாவிற்குள் செயல்படுவதற்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அழைக்கப்படுகின்றன. மருத்துவச் சுற்றுலாவிற்கு சமமான ஒன்றை உயர்கல்வியில் அறிமுகப்படுத்துவதற்கான அறிவற்ற முயற்சியாகவே இதனைக் கருதலாம் என்றாலும், இது சில வேறுபட்ட கருத்தாய்வுகள் இருப்பதையும் காட்டுகிறது. பெருநிறுவன பாணியிலான நிர்வாகம், சந்தை சார்ந்த பாடநெறி கட்டமைப்புகள், ஆசிரியர்களின் தற்காலிக அல்லது ஒப்பந்த வேலைவாய்ப்பு மற்றும் அதிக கட்டணம் உள்ளிட்ட இந்திய பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டிய தரத்தை அல்லது முன்மாதிரியை இது மறைமுகமாக அமைத்து தருகிறது. சுதேசி இந்தியாவிற்கு கலங்கரை விளக்கமாகச் செயல்படுவதற்கு, விதேசி பல்கலைக்கழகங்களை வரவழைப்பது உண்மையில் முரணாகவே இருக்கிறது.

20
 மையப்படுத்தப்பட்ட தேசிய ஆராய்ச்சி நிதி (என்ஆர்எஃப்) அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்கான நிதியை பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அது வழங்கும். மேலே குறிப்பிட்டுள்ளவாறு, வெறுமனே பெறப்பட்ட ஆராய்ச்சி திட்டங்களுக்கான போக்கையே பின்பற்றுகிறதேசிய ஆராய்ச்சி நிதியில், தேசிய அறிவியல் அல்லது தொழில்துறைக்கான முன்னுரிமைகள் அமைக்கப்பட்டதற்கான  அறிகுறியே இருக்கவில்லை. இரண்டாவதாக, ஆராய்ச்சி முன்னுரிமைகள் மற்றும் திட்டங்கள் மாநிலங்களை நோக்கி மாற்றப்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. இது மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு  இடையில் இருக்கும் இடைவெளியை மேலும் அதிகரிக்கிறது.

21
 தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய பலியாக ஆசிரியர்கள் இருக்கக்கூடும். உயர்கல்வி நிறுவனங்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பெருநிறுவன பாணி நிர்வாகத்தின் மூலமாக (பத்தி 13.4-13.7), மாணவர்கள் சோதனை விலங்குகள் போலவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மிக மோசமானமுடிவை எதிர்கொள்ளப் போகின்றவர்களாகவும் இருக்கப் போவதாகத் தெரிய வருகிறது. ஆசிரியர்களின் ஊதியம், வேலைகளின் வகை மற்றும் கால அளவு, பதவி உயர்வு மற்றும் பல விஷயங்கள் அரசால் பரிந்துரைக்கப்படுகின்ற விதிகள் மற்றும் தரங்கள் எதுவுமின்றி, சம்பந்தப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களின் ஆளுநர் குழுவால் அவர்களுக்குள்ளாகவே தீர்மானிக்கப்படும். செயல்திறன் மதிப்பீடு என்பது எந்தவொரு மேற்பார்வை அல்லது ஒழுங்குமுறைகளும் இன்றி அவர்களால் சுதந்திரமாகத் தீர்மானிக்கப்படும்.

22
 உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி அல்லதுநிர்வாகம் குறித்த நிர்வாகத்தின் ஜனநாயகமயமாக்கலுக்கான எந்தவொரு கட்டமைப்பும் இந்த தேசிய கல்விக் கொள்கையில் முழுமையாக இல்லை. ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கென்று எந்தவொருபாத்திரமும் திட்டமிடப்படவில்லை.மேலும் உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி அல்லது நிர்வாக அமைப்புகளில் மாணவர்களுக்கான எந்தவொரு பங்கும் குறிப்பிடப்படவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியக்குழு

நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

தமிழில்: தா.சந்திரகுரு (https://www.peoplesdemocracy.in/2020/0809_pd/cpim-response-new-education-policy-2020-nep.)