முதுநிலை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியதை ரத்து செய்து தமிழகத்திலேயே தேர்வு மையம் அமைத்திட வேண்டும் என ஆர்.சச்சிதானந்தம் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"நாடு முழுவதும் எம்.டி, எம்.எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு 2025-26-ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக ஜூன் 15-ஆம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற இருந்த நீட் தேர்வுக்கு தமிழகத்திலிருந்து 25 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 2.30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஒரே கட்டமாக முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 25%க்கும் அதிகமான மாணவர்களுக்கு ஆந்திரா, கர்நாடகா தெலுங்கானவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை, மதுரை, கோவையை தேர்வு செய்த பல மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுவது மாணவர்களை மனரீதியாக பாதிக்கக் கூடியதும், அவர்களின் நம்பிக்கையை சிதைப்பதும் ஆகும்.
தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்களை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் இருந்தும் தேசிய தேர்வு முகமை தொடர்ச்சியாக தமிழக மாணவர்களை வஞ்சித்து வருகிறது. ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் அமைத்திட வேண்டும்.
ஒன்றிய அரசு நடத்தக்கூடிய தேர்வுகளில் தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. ஒவ்வொரு முறையும் தமிழகத்திலேயே தேர்வு மையம் வேண்டும் என்று போராட வேண்டிய நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. உடனடியாக தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் அமைப்பதை ஒன்றிய அரசு உறுதிப்படுத்திட வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.