திண்டுக்கல்:
திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் டெண்டர் விடாமல் புதிதாக கடைகள்கட்டி ஆளுங்கட்சியினரும், அதிகாரி களும் கோடிக்கணக்கில் வசூல் செய்துவருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் நகர் செயலாளர் பி.ஆஸாத் விடுத்துள்ள அறிக்கை: திண்டுக்கல்லில் மிக முக்கியமான காய்கறி மார்க்கெட் காந்தி மார்க்கெட். இங்கு ஏ.பிரிவு கடைகள் 74, ஏ.1 பிரிவில் 41, பி.பிரிவில் 90, சி.பிரிவில் 155 கடைகள் என மொத்தம் 360 கடைகள் செயல்பட்டன.
கொரோனா தொற்று காரணமாக காந்தி மார்க்கெட்டை நான்கு பகுதிகளாகப் பிரித்து மாநகராட்சி நிர்வாகம் கடைகள் அமைத்தது. நகரின் பல பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்தநிலையில் திண்டுக்கல் எம்.வி.எம். கலைக்கல்லூரிக்கு மார்க்கெட் மாற்றப்பட்டது. பின்னர் மாவட்ட நிர்வாகம்திண்டுக்கல் எம்.வி.எம். கலைக்கல் லூரி வளாகத்தை கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மையமாக மாற்றியது. இதையடுத்து மீண்டும் காந்தி மார்க்கெட் நத்தம் சாலையில் உள்ள ஐ.டி.ஐ. வளாகத்திற்கு மாற்றப்பட்டது. கொரோனா காலத்தை பயன்படுத்திகாந்தி மார்க்கெட்டில் கட்டுமானப்பணி களை மாநகராட்சி நிர்வாகம் மேற் கொண்டு வருகிறது. இதில் ஏ.பிரிவு கடைகள் 74, ஏ.1 பிரிவு 34, பி.மற்றும் சி கடைகள் 105 கட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வியாபாரிகள் சங்கத்திடம் கலந்து பேசி முடிவெடுக்க வில்லை. ஏ.பிரிவு கடைகளுக்கு ரூ.3 லட்சம். பி.மற்றும் சி பிரிவு கடைகளுக்கு ரூ.2 லட்சம் என நிர்ணயம் செய்து வியாபாரிகளிடம் வசூலித்து கடைகளைக் கட்டி வருகிறது.
கட்டுமானப்பணிகளை தொடங்கு வதற்கு முறையான திட்ட மதிப்பீடு, டெண்டர், எதுவும் இல்லாமல் சட்டவிதிகளுக்கு புறம்பாக மாநகராட்சி நிர்வாகம் செயல்படுகிறது. கட்டுமானப்பணிகளும் தரமின்றி உள்ளது. கடைகள் ஒதுக்கீடு செய்ய வியாபாரிகள் ஏற்கனவே கொடுத்த தொகை போதாதென்று ஏ.பிரிவு கடைகளுக்கு ரூ.2 லட்சம், பி.மற்றும் சி. பிரிவு கடை களுக்கு ஒரு லட்சமும் கொடுக்க வேண்டும் என்று வியாபாரிகளை மாநகராட்சி நிர்வாகம் நிர்ப்பந்தித்து வருகிறது. இந்த வசூல் போதாதென்று மீண்டும் கடை வியாபாரிகளிடம் தலா ரூ.70 ஆயிரம் வரை தனிப்பட்ட முறையிலும் ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்காக வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தொகையை கொடுக்காவிட்டால் ஏற்கனவே அனுபவத்தில் வியாபாரம் செய்து வந்த வியாபாரி களுக்கு கடைகளை கொடுக்க முடியாது என்று கூறுகின்றனர். ஏற்கனவேஅங்கு கடை வைத்து அனுபவத்தில் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்கே மீண்டும் கடைகளை வழங்கவேண்டும். லட்சக்கணக்கில் கெடுபிடி வசூல் செய்வதை கைவிட வேண்டும. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு இல்லாத நிலையில் இது போன்ற வசூல் வேட்டையில் ஈடுபடு பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போராட்டம் நடத்த முடிவு
இந்த ஊழல் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 5-ஆம் தேதி மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், நகர்செயலாளர் பி.ஆஸாத் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.