tamilnadu

img

கழிவறையை சுத்தம் செய்ய ஆபத்தான முறையில் தண்ணீர் எடுத்து செல்லும் பள்ளி மாணவர்கள்  

பாலக்கோடு அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய, தொட்டியிலிருந்து ஆபத்தான முறையில் தண்ணீர் எடுத்து செல்லும் மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கும்மனூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தூய்மைப் பணியாளர்கள் இல்லாததால், மாணவர்களே பள்ளி மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்து வருகின்றனர்.  

இந்நிலையில் கழிவறையை சுத்தம் செய்வதற்காக பள்ளி மாணவர்கள் சிலர் கிராமத்தில் உள்ள ஒரு தண்ணீர் தொட்டியில், ஆபத்தை உணராமல் தண்ணீர் எடுத்து செல்கின்றனர். மேலும் ஆசிரியர்களின் கழிவறையை சுத்தம் செய்வதற்கு தண்ணீரை இவர்களே நிரப்பி வருகின்றனர்.  

கடந்த சில தினங்களுக்கு இதுபோன்ற சம்பவம் காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்றது. அதனைதொடர்ந்து பள்ளியை சுத்தம் செய்தல், கழிவறை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மாணவர்களை வைத்து செய்யக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டபோதும், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இதுகுறித்து தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி கூறுகையில், தருமபுரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கு தூய்மை பணியாளர்களை வைத்து, பள்ளியின் பணிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

மேலும் பாலக்கோடு மாவட்ட கல்வி அலுவலரை நேரில் சென்று ஆய்வு செய்து, விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்தப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.