தருமபுரி, மே 25-அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் 8 தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளின் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் 47 தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளன. இந்த நிறுவனங்களின் சார்பில் 527 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஒவ்வொரு ஆண்டும் மே மாதங்களில் போக்குவரத்துத் துறை சார்பில் தனியார்பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இதையடுத்து, இரண்டாம் கட்டமாக ஆய்வு செய்யப்பட்ட 167 தனியார் பள்ளி பேருந்துகளில், 8 பேருந்துகள் முறையாக பராமரிப்பு செய்யப்படாததால், அந்த பேருந்துகளின் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது.இம்முகாமில் பங்கேற்ற தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு போக்குவரத்து விதிகள், மருத்துவ பரிசோதனைகள், மருத்துவக் காப்பீடு, விபத்துகளை கட்டுப்படுத்துதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள், தலைக்கவசம் அணிவதன் அவசியம் உள்ளிட்டவைகள் குறித்த விழிப்புணர்வு கருத்துரைகளை அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் வழங்கினார்.இந்த முகாமில், பறக்கும்படை மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகர், கண்காணிப்பாளர் செல்வமணி, தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.