tamilnadu

img

மாபெரும் புரட்சியாளர் அமீர் ஹைதர் கான்

இந்திய துணைக்கண்டத்தின் தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய புரட்சியாளர்களில் அமீர் ஹைதர் கான் குறிப்பிடத்தக்கவர். ஆங்கிலேய காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்திலும், வர்க்கமற்ற சமு தாயத்தை உருவாக்குவதிலும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். எழுபதாண்டுகளுக்கும் மேலாக அடக்கு முறை, சிறைவாசம் மற்றும் துன்பங்களை எதிர்கொண்டும் மக்கள் நலனுக்காகப் போராடிய அவரது வாழ்க்கை 20-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியின் வரலாற்றை பிரதிபலிக்கிறது.  இளமைக்கால வாழ்க்கை 1900-ஆம் ஆண்டு வடக்கு பஞ்சாப் மாகாணத்தில் (தற்போதைய பாகிஸ்தான்) உள்ள காலியன் சியாலியன் கிராமத்தில் ஒரு சிறு விவசாயக் குடும்பத்தில் பிறந் தார். இப்பகுதி பொருளாதார, அரசியல் ரீதியாக பின்தங்கியிருந்தாலும், பின்னா ளில் பல தேசப்பற்றாளர்களையும் புரட்சி யாளர்களையும் உருவாக்கிய பெருமை பெற்றது. ஐந்து அல்லது ஆறு வயதில் தந்தையை இழந்த அமீர், பள்ளிகள் இல்லாத சூழலில் முறையான கல்வி பெற  இயலவில்லை. சித்தப்பாவின் ஆதரவும் கிடைக்காத நிலையில், பதினான்கு வயதிலேயே வாழ்க்கைப் போராட்டத்தை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  கடல் பயணங்களும் அரசியல் விழிப்புணர்வும் 1914-இல் பம்பாய் சென்று கப்பல் தொழிலாளியாக பணி யாற்றத் தொடங்கினார். கப்பலில் தொழி லாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்த்து நிர்வாகத்துடன் போராடி வெற்றி கண்டார். 1918-இல் அமெரிக்க வணிகக் கப்பலில் பணியமர்ந்து ஐரோப்பா, அமெரிக்கா, கிழக்கு நாடுகள் என உலகம் முழுவதும் பயணித்தார். இப்பய ணங்களின் போது காலனியாதிக்க எதிர்ப்பு  சிந்தனைகளும், தொழிலாளர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வும் பெற்றார்.

சர்வதேச அரசியல் தொடர்புகள்

இக்காலத்தில் அயர்லாந்து தேசியவாதி ஜோசப் முல்கானேவின் அறிமுகம் அமீரின் அரசியல் சிந்தனைகளை வளர்த்தது. 1920-இல் நியூயார்க்கில் இந்திய தேசியவாதிகள் மற்றும் கதார் கட்சி உறுப்பினர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். கதார் கட்சியின் கொள்கைகளை உலகெங்கும் வாழும் இந்தியர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். 1922-இல் தொழிலாளர் போராட்டங்களில் பங்கேற்றதற்காக கப்பல் பணியிலிருந்து நீக்கப்பட்ட பின், அமெரிக்க தொழிலாளர் கட்சியுடன் இணைந்து பணியாற்றினார். கம்யூனிச இயக்கத்தில் பயிற்சி 1926-இல் மாஸ்கோவில்  உள்ள கீழைத்தேச உழைப்பாளர் பல்கலைக்கழகத் தில் படிக்க அனுப்பப்பட்டார். ‘சகோரோவ்’ என்ற புனைப்பெயரில் இரண்டாண்டுகள் மார்க்சியம் மற்றும் லெனினிசம் கற்றார். 1930-இல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 16-வது மாநாட்டிலும், சர்வதேச தொழிற்சங்க மாநாட்டிலும் பங்கேற்றார்.

இந்திய சுதந்திரப்  போராட்டத்தில் பங்களிப்பு

1928-இல் இந்தியா திரும்பிய பின் பம்பாயில் முக்கிய கம்யூனிஸ்ட் தலை வர்களுடன் தொடர்பு கொண்டார். ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஜவுளி ஆலைத்தொழிலாளர்களை  ஒருங்கிணைத்து  போராட்டங்களை நடத்தினார். 1929-இல் மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார்.  தென்னிந்திய அரசியல் பணிகள் 1931-இல் மீரட் வழக்கிலிருந்து தப்பிக்க சென்னைக்கு அனுப்பப்பட்ட அமீர், ‘சங்கர்’ என்ற புனைப்பெயரில் தென்னிந்தியா முழுவதும் பணியாற்றினார். 1932-இல் சென்னையில் இளம் தொழிலாளர் லீக்  அமைத்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் விவ சாயிகள் இயக்கத்தை வலுப்படுத்தினார். லயோலா கல்லூரி மாணவர் புட்சலப் பள்ளி சுந்தரய்யா போன்ற இளம் தலை வர்களை உருவாக்கினார். இதே ஆண்டில் பகத் சிங்கை ஆதரித்து துண்டுப்பிரசுரம் வழங்கியதற்காக கைது செய்யப்பட்டார். சிறைவாசமும் எழுத்துப் பணியும் 1939-இல் பம்பாயில் இந்திய பாது காப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை அனு பவித்தார். சிறையில் இருந்தபோது தனது வாழ்க்கை அனுபவங்களை “சங்கிலிகளை இழக்க: ஒரு புரட்சியாளரின் வாழ்க்கை மற்றும் போராட்டங்கள்” என்ற நூலாக எழுதினார். 1942-இல் கம்யூனிஸ்ட்களில் கடைசியாக விடுதலையான அமீர், தொடர்ந்து தொழிலாளர், விவசாயி இயக்கப் பணிகளில் ஈடுபட்டார். பாகிஸ்தான் காலகட்டம் 1945-இல் சொந்த ஊரில் புரட்சிகர இயக்கத்தை கட்டமைக்க அனுப்பப் பட்டார். நாட்டுப் பிரிவினையின் போது பாதிக்கப்பட்ட இந்து குடும்பங்களை பாதுகாப்பாக இந்தியா அனுப்பினார். பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய பொறுப்புகள் வகித்த அவர், மதச்சார்பற்ற, ஜனநாயக உரிமை களுக்காக போராடினார். 1949-இல் வகுப்புவாதச் சட்டத்தின் கீழ் 15 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1958-இல்  ஜெனரல் அயூப் கான் ஆட்சியில் மீண்டும் சிறை தண்டனை அனுபவித்தார்.

இறுதிக் காலமும் மரபும்

1970-80 காலகட்டத்தை ராவல்பிண்டி யில் கழித்த அமீர், 1988-இல் சுதந்திர இந்தியா விற்கு முதன்முறையாக வருகை தந்து பழைய தோழர்களைச் சந்தித்தார். 1989  டிசம்பர் 27 அன்று காலமானார். தன்னை  “வீடின்றி அலைபவர்” என அழைத்துக் கொண்ட அவர், தனது பரம்பரை நிலத்தை  அறிவியல் ஆய்வகம், ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகள் நிறுவ தானமாக வழங்கினார். வரலாற்று முக்கியத்துவம் ஆங்கிலேய அதிகாரிகளால் “மிகவும் ஆபத்தான நபர்” என கருதப்பட்ட அமீர்  ஹைதர் கான், சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய இணைப்பாளராக வும், தொழிலாளர் வர்க்க விடுதலைக்கான போராட்டத்தின் முன்னோடியாகவும் திகழ்ந்தார். அவரது வாழ்க்கை மார்க்சிய சிந்தனைக்கு ஓர் உதாரணமாகத் திகழ்கிறது. தொழிலாளர் விடுதலைக்கும், சமத்துவ சமுதாயத்திற்கும் அவர் ஆற்றிய பணிகள் வரலாற்றில் நினைவு கூரத்தக்கவை. அவரது வாழ்க்கை வரலாறு இன்றைய தலைமுறையினருக்கும் வரும் தலைமுறையினருக்கும் உத்வேகம் அளிக்கும் ஊற்றாக திகழ்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகளில் ஒருவரான தாதா அமீர் ஹைதர் கான் மறைவையொட்டி, பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் வெளியான கட்டுரை
- தமிழில்: ஆர்.நித்யா