tamilnadu

img

அடி மனைப் பயனாளிகளின் கவலை தீர்க்குமா அரசு? - வ.செல்வம்

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வக்ஃப் வாரியத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆழ்ந்த கவலை நிலவுகிறது.  அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகள் மற்றும் இனாம்நில விவசாயிகள்  எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பல்வேறு கோரிக்கைகளும், போராட்டங்களும் நடத்தப்பட்டும் இதுவரை எந்த உறுதியான தீர்வும் எட்டப்படவில்லை.  கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த விவகாரம் பல்வேறு தளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. 2021ல் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மாநாட்டில் இது குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தேர்தல் காலத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை ஆய்வுக் குழுவிடமும், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சிகளிலும் இந்தப் பிரச்சனைகள் முன்னிலைப்படுத்தப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாகவும், அமைச்சர் சேகர்பாபுவிடமும் தொடர்ந்து வலியுறுத்தல்கள் நடைபெற்று வருகின்றன.  முதன்மையாக மூன்று பெரும் பிரச்சனைகள் உள்ளன. அடிமனை பயனாளி கள் பல மடங்கு உயர்த்தப்பட்ட வாடகையால் சிரமப்படுகின்றனர். கலைஞர் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட 298/10 அரசாணை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

குத்தகை விவசாயிகளைப் பொறுத்தவரை, பல தலைமுறைகளாக பயிரிட்டு வரும் நிலங்களிலிருந்து அவர்களை வெளியேற்றும் முயற்சிகள் நடைபெறு கின்றன. மறு ஏல முறை மூலம் அவர்களது வாழ்வாதாரம் பறிபோகும் அபாயம் உள்ளது.  இனாம் நில விவசாயிகளின் நிலை மிகவும் கவலைக்குரியது. 14 லட்சம் ஏக்கர் நிலங்களின் மதிப்பு புள்ளியாக்கப்பட்டுள்ளது. பல தலைமுறை பட்டாதாரர் களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தூத்துக்குடி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் இந்த பிரச்சனை தீவிரமாக உள்ளது.  இந்தப் பிரச்சனைகளுக்கு வரலாற்றுப் பின்னணி உண்டு. 1958ல் பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் இது குறித்து கேள்விகள் எழுப்பினார். 1960களில் கம்யூ னிஸ்ட் கட்சிகளும், திராவிட விவசாய சங்கமும் போராட்டங்களை நடத்தின.  கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.  தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாக செயல்பட வேண்டும். கலைஞர் காலத்து நடைமுறைகளுக்கும் தற்போதைய நிலைக்கும் பெரும் வேறுபாடு உள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல வழிகள் உள்ளன. அவசர சட்டத் திருத்தங்கள் கொண்டு வரலாம். நிலங்களை பயனாளிகளுக்கு உரிமையாக்க லாம். அரசுடைமையாக்கல் மூலம் நிரந்தர தீர்வு காணலாம். கூட்டுறவு விவசாய பண்ணைகள் உருவாக்கலாம். சமூக நீதி, அரசியல் சாசன உரிமைகள் அடிப்படையில்  தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.