tamilnadu

சேலத்தில் 79 பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து

சேலம், மே 23-சேலம் உள்பட ஓமலூர் சரகத்தில் 79 பள்ளி வாகனங்களின் தகுதிச் சன்று ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் மே 31 ஆம் தேதி வரை பள்ளிப் பேருந்துகள் ஆய்வு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அனைத்து தனியார் பள்ளிகளின் வாகனங்களையும் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.இதன்ஒருபகுதியாக சேலம் சரகத்துக்குட்பட்ட சேலம், தருமபுரி மாவட்டங்களில் தற்போது பள்ளி வாகனங்களின் ஆய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த மே 15 ஆம் தேதி வரை 1,600 பள்ளி வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் குறைபாடு கண்டறியப்பட்ட 79 பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சிறு, சிறு குறைபாடு கண்டறியப்பட்ட பள்ளி வாகனங்களை நிவர்த்தி செய்து, வட்டாரப்போக்குவரத்து அதிகாரியிடம் காட்டி தகுதிச் சான்று பெற்று வருகின்றனர்.இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது, சேலம் சரகத்தில் 410க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 3,497 வாகனங்கள் உள்ளன. கடந்த 15 ஆம் தேதி வரை 1,600 பள்ளி வாகனங்கள் ஆய்வுசெய்யப்பட்டன. இதில், 1,521 வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்கப்பட்டுள்ளது. குறைபாடுகள் கண்டறியப்பட்ட 79 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து ஆய்வுக்குள்படுத்தி தகுதிச் சான்று பெற்ற பிறகே வாகனங்களை இயக்கவேண்டும். வரும் மே 31 ஆம் தேதிக்குள் அனைத்துப் பள்ளிவாகனங்களும் ஆய்வு செய்து அதன் அறிக்கையை சென்னை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தனர்.