அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எளமரம் கரீம் வலியுறுத்தல்
புதுதில்லி, ஏப். 9- கொரானா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளி லிருந்து சாமானிய மக்கள் மீள்வ தற்கு, அவர்களின் ஜன்தன் கணக்குகளில் ஐயாயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் எளமரம் கரீம் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி புதனன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். காணொலிக்காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்தில், திருவனந்தபுரத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் எளமரம் கரீம் முன்வைத்த கருத்துக்கள் வருமாறு:
நாட்டில் நிலவும் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக, அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளின் கூட்டத்தைக் கூட்டியிருக்கின்ற மத்திய அரசின் முடிவை நான் பாராட்டுகிறேன். கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் பரவத் தொடங்கியதிலிருந்தே இதேபோன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் பல கட்சிகளும் பிரதமரைக் கோரி வந்தன. கோவிட்-19க்கு எதிரான போராட்டம் என்பது ஒட்டு மொத்த நாட்டின் போராட்டம், நாட்டு மக்களின் போராட்டமாகும். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும். இது இப்போது காலத்தின் கட்டாயமாகும். இதுதொடர்பாக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எங்கள் ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாம் அனைவரும், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால், ஒன்றுபட்டு நின்று, இப்போதைய நிலைமையை வலுவாக எதிர்கொள்ள வேண்டும்.
நாடு முழுதும் சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டது அவசியம்தான் என்றபோதிலும், அதனைத் திடீரென்று அறிவித்தது பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி இருக்கிறது. நம் நாடு இப்போதைய நெருக்கடியையும், சமூக முடக்கம் முடிவடைந்தபின்னர் நாம் சந்திக்க இருக்கும் சிரமமான சூழ்நிலைகளையும் குறிப்பிட்டு அவற்றைச் சமாளித்திட நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் சிலவற்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
குடிமக்களை பொருளாதாரரீதியாக பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்
1. இந்தியாவில் கொரானா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகின முதல் நபர் குறித்து ஜனவரி இறுதியில் செய்தி வெளிவந்தது. அதன் பின்னர், சமூக முடக்கம் அறிவிக்கப்படும் தேதி வரையில் சுமார் இரண்டு மாதங்க ளைப் பெற்றிருந்தோம். இந்தக் காலம் இதனை எதிர்த்து முறியடிப்பதற்கான நடவடிக்கைகளுக்காகத் திட்டமிட வலுவான முறையில் பயன்படுத்தப் படவில்லை. இவ்வாறு திட்டமின்மை யின் விளைவாகவும், இத்தொற்று குறித்து மக்கள் மத்தியில் விழிப்பு ணர்வை ஏற்படுத்தாதன் விளைவாக வும்தான், புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள் கொத்து கொத்தாக வெளியேறுவதும், குடிமக்கள் மத்தி யில் தேவையற்ற கொந்தளிப்பும் ஏற்பட்டிருக்கின்றன.
2. இன்றைய தினம் நாட்டின் பொருளா தார நிலைமை உறுதியான நிலையில் இல்லை. கோவிட்-19 தொற்று இதனை மேலும் மோசமாக்கி இருக்கிறது. சமூக முடக்கத்தின் காரணமாகவும், அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதன் காரணமாகவும் நாள்தோறும் ஊதியம் பெற்று வாழ்ந்துவந்த கோடானு கோடி தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் இப்போது பசி - பஞ்சம் - பட்டினியால் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார் கள். அரசாங்கம், உடனடியாக நாட்டி லுள்ள அனைத்து ஜன்தன் கணக்கு களுக்கும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கும், முறை சாராத் தொழிலாளர்களுக்கும் 5000 ரூபாய் உடனடியாக மாற்றல் செய்திட வேண்டும். இதன் மூலமாக மட்டுமே, இப்போதைய நெருக்கடி யான காலகட்டத்தில் இம்மக்கள் பிரிவினரை பட்டினிச் சாவிலிருந்து காப்பாற்ற முடியும்.
3. மத்திய அரசாங்கம், புலம்பெயர்ந்து வந்துள்ள அனைத்துத் தொழிலா ளர்களுக்கும் மற்றும் நாடு முழுதும் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் உதவும் விதத்தில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 35 கிலோ கிராம் உணவு தானியங்கள் அளிக்க வேண்டும். இந்திய உணவுக் கழகம் மற்றும் அரசாங்கத்தின் ஏஜென்சிகள், மார்ச் 1 தேதியன்று எடுத்துள்ள கணக்கின்படி அரிசி 50 மில்லியன் டன்களும், கோதுமை 27.5 மில்லியன் டன்களும் இருப்பு இருக்கிறது.
4. நகரங்களில், குறிப்பாக நகர்ப்புற சேரிகளில் வாழும் மக்கள், பசி - பஞ்சம் - பட்டினிச்சாவிலிருந்து தடுக்கப்பட வும், மற்றும் கொரானா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கப்படவும் அவர்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் உடனடியாக அளிக்கப்பட வேண்டும்.
5. கேரளத்தில் செய்திருப்பதைப் போல, விளைந்துள்ள பயிர்களை அறுவடை செய்வதை அத்தியாவசியப் பணி யாக அறிவித்திட வேண்டும், அங்கே சமூக முடக்கத்தை ரத்து செய்திட வேண்டும், அறுவடை செய்வதற்காக விவசாயிகளுக்கும், விவசாயத் தொழி லாளர்களுக்கும் பாதுகாப்பு அளித்திட வேண்டும். மேலும் அறுவடை எந்திரங்களையும், அடுத்த பருவத்திற்குத் தேவையான விதை களையும் இலவசமாக அளித்திட வேண்டும். விவசாயிகள் விளை வித்த விளைபொருள்களை அரசாங்கமே குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்திட வேண்டும். இவற்றிற்கு இந்திய உணவுக் கழகத் திற்குக் கட்டளையிட வேண்டும்.
6. மகாத்மா காந்தி தேசிய கிராப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் (MGNREGA) கீழ் சமூக முடக்கத்தின் காரணமாக வேலையிழந்துள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கும் இதர பயனாளிகளுக்கும் ஊதியங்கள் அளிக்கப்படும் விதத்தில் இச்சட்டத்தின் கீழ் வேலை யில்லாகால நிவாரணம் (unemploy-ment benefit) என்னும் ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும்.
7. மத்திய அரசும் மாநில அரசாங்கங்க ளும், கறுப்புச் சந்தையைக் கட்டுப் படுத்த, கடும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். பதுக்கல் மற்றும் செயற்கை விலை உயர்வைத் தடுத்தி டும் விதத்தில், அத்தியாவசியப் பொருள்கள் ஒவ்வொன்றுக்கும் அதிகபட்ச சில்லரை விலையை அறிவித்திட வேண்டும். இவற்றை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். அத்தியாவசியப் பொருள்களைப் போதுமான அளவிற்கு விநியோகம் செய்வதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.
கொரானா வைரஸ் தொற்றுப் பரவுவதைத் தடுத்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
1. பல்வேறு பகுதிகளிலிருந்தும் புலம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்க ளுக்கும், மற்றவர்களுக்கும் முறை யான சுகாதாரப் பாதுகாப்பு வசதி களை அளித்திட வேண்டும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்களுக்குத் தனிமைப்படுத்தும் வசதிகளை மிகவும் வலுவான முறை யிலும், ஆரோக்கியமான முறை யிலும் அமைத்துத்தர வேண்டும்.
2. பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிற மக்களைத் தனிமைப்படுத்துவதும், அவர்களின் தொடர்புகளைத் தனித்து வைத்திருப்பதும் அவசியம். இதற்காக, அரசாங்கம் அனைத்து அரசாங்க மருத்துவமனைகளிலும் உடனடியாக வசதிகளை மேம்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனைகளிலும் போதுமான அளவிற்கு இதற்கான வசதிகளை ஏற்படுத்துவதை உத்தர வாதப்படுத்திட வேண்டும். இது தொடர்பாக, கேரள மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கிற நடவ டிக்கைகளை இந்தியாவின் இதர பகுதிகளுக்கும் நீட்டித்திடலாம்.
3. பேரிடர் மேலாண்மை மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் இதற்காக நாட்டில் தேவைப்படும் மருத்துவ மனைப் படுக்கைகள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு வசதிகள் குறித்து கூடுதலாக எவ்வளவு தேவை என்று கூறியிருக்கிறார்கள். அவற்றை ஏற்படுத்துவதற்கு பெரிய அளவில் முதலீடு அவசியம். மத்திய அரசாங்கம், இதற்கான செலவி னங்களை மாநிலங்கள், அவர்களு டைய பேரிடர் நிவாரண நிதியத்தி லிருந்து எடுத்துக்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும்.
4. இத்தொற்றுக்கு உள்ளானவர்களைக் கண்டறிவது என்பதும் அவசியம். இவ்வாறு இத்தொற்றுக்கு ஆளாகி யுள்ள நபர்களை வலுவான முறை யில் கண்டறிந்து, அவர்களைத் தனிமைப்படுத்தினால், இந்தியா வில் ஒட்டுமொத்தமாக சமூகப் பரவல் ஏற்படும் அவலத்தைத் தவிர்த்திட முடியும். இது தொடர்பா கவும், கேரளா எடுத்துள்ள நடவ டிக்கைகளை, இதர மாநிலங்கள் ஒரு முன் மாதிரியாக எடுத்துக்கொள்ள முடியும்.
5. சுகாதார ஊழியர்கள் அனைவரு க்கும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகர ணங்களும், தேவையான மருத்துவ ஆதரவும் அளிக்கப்பட வேண்டும். வென்டிலேட்டர்கள் போன்ற அத்தி யாவசிய உபகரணங்கள் முன்னு ரிமை அளித்து அவசரகதியில் அளிக்கப்பட வேண்டும்.
6. நாடு முழுவதும் சோதனைக் கருவி கள் மிகவும் விரைவான முறையில் அனுப்பப்பட வேண்டும். தற்போது மக்களைச் சோதனை செய்யும் முறை நம் நாட்டில் மிகவும் குறைவாக இருக்கிறது. இது தென் கொரியாவை விட 241 நாடுகளுக்குக் கீழே இருக்கி றது. அவசரகதியில் சோதனை செய்தி டும் முறை ஏற்கனவே கேரளாவில் தொடங்கிவிட்டது என்பதை இங்கே குறித்துக் கொள்ளலாம்.
7. மத்திய அரசாங்கம், இந்தத் தொற்று பரவுவதை மிகவும் வலுவான முறையில் கட்டுக்குள் கொண்டு வந்தி ருக்கிற சீனா, கியூபா, தென் கொரியா போன்ற நாடுகளின் உதவியையும், மருத்துவ ஆதரவையும் அவசர கதியில் கோரிட வேண்டும். இந் நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கை களை உலகமே அங்கீகரித்திருக் கிறது. கியூபா மற்றும் சீனா போன்ற நாடுகள் இதுபோன்ற சிரமமான நேரங்களில் நமக்கு உதவிட எப்போ தும் தயாராகவே இருக்கின்றன.
8. உலகில் உள்ள பல நாடுகள், இப்போ தைய இக்கட்டான சூழ்நிலை காரண மாக, தங்கள் நாட்டின் தொழிலா ளர்கள் வேலைக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அவர்களுக்குக் குறைந்தபட்சம் 80 சதவீத ஊதியம் அளிக்கப்படுவதை உத்தரவாதப் படுத்தி இருக்கின்றன. இதே போன்று மத்திய அரசாங்கமும் செய்திட வேண்டும்.
சமூகமுடக்கம் விலக்கிக்கொள்ளப்பட்டபின் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்
1. மத்திய அரசாங்கம், எந்தத் துறையி லும் வேலையிழப்பு, ஊதிய வெட்டு அல்லது எவ்விதமான ஆட்குறைப்பு செய்யப்படாது என்பதை உத்தர வாதப்படுத்த வேண்டும்.
2. தொழிற்சாலைகளிலும், கட்டு மானத் துறைகளிலும் மீண்டும் வேலைகள் உடனடியாகத் துவங்கப்பட வேண்டும். அவற்றுடன் இணைந்தி ருந்த இலட்சக்கணக்கான தொழிலா ளர்களை, குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களை, பாதுகாத்திடு வதை அரசாங்கம் உத்தரவாதப் படுத்திட வேண்டும்.
3. பொருளாதார நடவடிக்கைகளில் போதுமான அளவிற்கு மூலதனம் உட்செலுத்தப்பட வேண்டும். அப்போதுதான், சமூக முடக்கத்திற்குப் பிந்தைய பொருளாதார மந்தத்தை வலுவான முறையில் சமாளித்திட முடியும்.
4. வேளாண்துறை உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டும். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும்.
5. வெளிநாடுகளில் வேலைபார்த்து வந்த இந்தியர்கள், அந்நாடுகளில் ஏற்பட்டுள்ள வேலையிழப்பின் காரணமாக நம் நாட்டிற்குத் திரும்பி வந்தால், அவர்களுக்கு உதவும் விதத்தில் ஒரு மறு வாழ்வு தொகுப்பு (rehabilation package) அறிவிக்கப் பட வேண்டும். அரசாங்கம், இவர்க ளுக்காக சிறப்பு வேலைவாய்ப்பு தொகுப்பு (special employment package) அறிவிக்க வேண்டும்.
6. நடுத்தர வர்க்கத்தினருக்கு, குறிப்பாக ஊழியர்களுக்கு, அவர்கள் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்து வதற்கு கால நீட்டிப்பு வழங்கிட வேண்டும். அவர்கள் செலுத்த வேண்டிய சமப்படுத்தப்பட்ட மாதாந்திர தவணைகளை (இஎம்ஐ) நிறுத்தி வைக்க வேண்டும்.
7. அனைத்து மாவட்டத் தலைநகர்க ளிலும் அரசாங்க மருத்துவக் கல்லூரிகளை துவங்கிட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
8. சமூக முடக்கத்தின் காரணமாக, புலம் பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடி யாது, பல மாநிலங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.
கேரளாவின் கோரிக்கைகள்
1. இப்போது ஏற்பட்டுள்ள அதீத மான சூழ்நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, மாநிலங்க ளுக்கான கடன் உச்சவரம்பை அதிகரித்திட வேண்டும். மாநிலங்க ளுடன் கலந்து பேசி கடன் உச்ச வரம்பைத் நிர்ணயித்திடலாம்.
2. கேரளாவிற்கு அளிக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகை சுமார் மூவாயிரம் கோடி ரூபாய்களாகும். இதை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
3. 2020-21ஆம் நிதியாண்டிற்கு கேரளா விற்கு, 15ஆவது நிதி ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டு,மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, 15,323 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை மானிய (Revenue Deficit Grant) தொகையில். 50 சதவீதத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
4. அதேபோன்றே 15ஆவது நிதி ஆணை யம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தொகை 2,412 கோடி ரூபாயையும் விரைந்து விடுவித்திட வேண்டும்.
5. தற்சமயம் மாநில பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து மாநிலங்கள் செலவு செய்வதற்கு மிகவும் குறைந்த தொகையே ஒதுக்கப்பட்டி ருக்கிறது. இப்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு இதில் ஒரு நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்தி, இதன் விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டும்.
6. மாநில பேரிடர் மேலாண்மை நிதியத் தின் ஒதுக்கீடுகள் நிதி ஆணையத்தால் அளிக்கப்பட்ட விதிமுறைகளின்கீழ் பரிந்துரைக்கப்படுபவை. கோவிட்-19ஆல் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி யுள்ள கேரளாவிற்கு இதிலிருந்து மிகவும் குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனை அதிகரித்திட வேண்டும்.
7. கோவிட்-19 தொற்றால் இறக்கா மல் வேறு விதங்களில் இறந்த வெளிநாடுவாழ் இந்தியர்களை இந்தியாவுக்குக் கொண்டுவருவ தற்கு எளிய விதிமுறைகள் தேவை. இது தொடர்பாக மத்திய அரசாங்கம் இந்திய தூதரகங்களுக்கு பொருத்த மான கட்டளைகளைப் பிறப்பிக்க வேண்டும்.
8. கோவிட்-19 நிவாரணத்திற்கு கேரளா விற்கு மத்திய அரசு அளித்துள்ள உதவி என்பது 157 கோடி ரூபாய். இத்தொகை என்பது மத்தியஅரசு அனைத்து மாநிலங்களுக்கும் அளித்துள்ள 11,091 கோடி ரூபாயில் வெறும் 1.4 சதவீதம் மட்டுமே. மத்திய அரசாங்கம், உச்சநீதிமன்றத்திற்கு அளித்துள்ள அறிக்கை ஒன்றில் நாட்டில் இந்நோய்த் தொற்று தொடர்பாக மொத்தம் உள்ள அரசாங்க நிவாரண முகாம்கள் மற்றும் தங்குமிடங்கள் 22,567இல் கேரளாவில் மட்டும் 15,541 இருக்கின்றன என்று குறிப்பிட்டி ருக்கிறது. அதாவது மொத்த முகாம்களில் கேரளாவில் மட்டும் 68.8 சதவீதம் இருக்கிறது. இந்தப் பின்னணியில், மத்திய அரசு, கேரளாவுக்கு நிதி உதவியை அதிகரித்திட வேண்டும்.
9. வளைகுடா நாடுகளில் தொழிலா ளர்கள் முகாம்களில் வாழ்ந்துவரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், தொற்றுக்கு ஆளாகிவிடுவோமோ என்கிற அச்சத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சிறு அறையில் 10-20 பேர் என்ற விதத்தில் அவர்கள் தங்கி இருக்கிறார்கள். எனவே இத் தொற்று வேகமாகப் பரவுவதற்கு வாய்ப்பு அதிகம். எனவே இவர்களுக்கு அவசிய மான முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட வேண்டி யிருக்கிறது. இவர்களுக்கு இத் தொற்று ஏற்படாமல் இருக்க உரியநடவடிக்கைகள் எடுத்திட, சம்பந்தப்பட்ட இந்தியத் தூதர கங்களை அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக தொழிலாளர் முகாம்களில் வாழும் இந்தியர்களுக்கு அந்நாட்டு அரசாங்கங்கள் போதிய பாதுகாப்பு அளித்திட கவனம் செலுத்துகின்றனவா என்று இந்திய தூதரகங்கள் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். பிரதமர் இது தொடர்பாக முன்முயற்சி எடுத்திட வேண்டும்.
நிலைமையைச் சமாளித்திட நான் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் மீது அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என நான் நம்புகிறேன். கோவிட்-19க்கு எதிராக அரசாங்கம் எடுத்திடும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் எங்கள் கட்சியின் முழு ஆதரவு உண்டு என்று மீண்டும் ஒருமுறை கூறிக் கொள்கிறேன்.இவ்வாறு எளமரம் கரீம் பேசினார்.
(தமிழில்:ச. வீரமணி)