சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சனை செய்ய வந்த பெண்ணை அடித்த தீட்ஷிதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் செல்வகணபதி மனைவி லதா(51). இவர் காட்டுமன்னார்கோயில் அடுத்த ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியராக பணியாற்றி வருகிறார்.இவர் தனது மகன் பிறந்த நாளையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள முக்குருணி விநாயகர்கோயிலுக்கு அர்சனை சென்றார். அப்பொழுது கோயிலில் பணியில் இருந்த தீட்சிதர் தர்ஷினிடம் பூஜை பொருட்களை கொடுத்துள்ளார். ஆனால் லதா தனது மகன் பெயரை கூறுவதற்குள் தீட்சிதர் உள்ளே சென்று வெறும் தேங்காயை மட்டும் உடைத்து அர்சனை செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வெளியே வந்த தீட்சிதர் தர்ஷனிடம் ராசி, நட்சத்திரம், பெயர் என எதையும் கேட்காமல் எப்படி அர்சனை செய்தீர்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு தீட்சிதர் ஏன் நீ வந்து உள்ளே செய்யேன் எனக் கூறியுள்ளார்.
இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட ஆத்திரமடைந்த தீட்சிதர், லதாவை தாக்கி கீழே தள்ளியுள்ளார். மேலும் லதாவை தகாத வார்த்தைகளால் திட்டி தீட்சிதர் கன்னத்தில் அறைந்ததால் கோயில் வளாகத்தில் மயங்கி விழுந்தார். அங்கிருந்த பக்தர்கள் தீட்சிதரை தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் காயமடைந்த லதா சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் தீட்சிதர் தர்ஷன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து நடந்த தீட்சிதர்களில் ஆலோசனை கூட்டத்தில் நடைபெற்றது. அதில் தீட்சிதர் தர்ஷன் 2 மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.