tamilnadu

img

மூலதனமும் இல்லை; புதிய ஆர்டர்களும் இல்லை; விற்பனையும் இல்லை... 90 சதவிகிதம் சரிந்த சூரத் ஜவுளி உற்பத்தி...

சூரத்:
இந்தியாவின் முன்னணி ஜவுளி உற்பத்தி நகரமான சூரத், கொரோனா தாக்கத்தால் மோசமான பாதிப்பை சந்தித்து இருப்பதாகவும், 90 சதவிகிதம் அளவிற்கு உற்பத்தி சரிந்து விட்டதாகவும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

உலகளவில் ஜவுளி உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும், ஏற்றுமதியில் மூன்றாவது இடத்திலும் இந்தியா இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் ஜவுளி உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் மும்பை, கோவை, சூரத் ஆகிய நகரங்கள்தான். இங்கு உற்பத்தியாகும் மொத்த ஜவுளி உற்பத்தியில் 65 சதவிகிதம் உள்நாட்டுத் தேவைக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்றால், இந்த உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் 90 சதவிகிதம் சூரத்தில் உற்பத்தியாகும் துணிகளாகவே உள்ளன. இங்கு பெரும்பாலும் பாலியஸ்டர் இழைகளால் ஆன துணிகளே உற்பத்தி செய்யப்படுகின்றன.சூரத் நகரின் கடட் காம், மக்தள்ளா, உதானா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் ஜவுளிகள், ஸம்பா பஜார், பாம்பே மார்க்கெட், ஜெ ஜெ டெக்ஸ்டைல் மார்க்கெட் மற்றும் ஜாஸ் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள விநியோகஸ்தர்கள் மூலம் விற்கப்படும்.ஆனால், கொரோனா ஊரடங்கு இந்த பெருமைகளை எல்லாம் குலைத்துப் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. நாளொன்றுக்கு சுமார் 4 கோடி மீட்டர் உற்பத்தித் திறன் கொண்ட சூரத் நகரில், ஊரடங்கிற்குப்பின் இப்போது 10 சதவிகிதத்திற்கும் குறைவாக அதாவது 25 லட்சம் மீட்டர் அளவிற்கு மட்டுமே ஜவுளி உற்பத்தி நடப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, இதே சூரத்தில் நாளொன்றுக்கு 5.5 கோடி மீட்டர் ஜவுளி உற்பத்தி இருந்தது. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் தொழில்கள் நலிவடையத் துவங்கி 4 கோடி மீட்டராக சுமார் ஒன்றரை கோடி மீட்டர் உற்பத்தி குறைந்தது. தற்போது, கொரோனா அதனை படுமோசமாக 25 லட்சம் மீட்டராக அதலபாதாளத்திற்கு தள்ளியுள்ளது என்று உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.ஊரடங்கு காரணமாக கிராமங்களுக்குத் திரும்பிச் சென்ற பணியாளர்கள் மீண்டும் பணிக்கு வரவில்லை என்பதாலும் ஜவுளி விநியோகஸ்தர்களும் ஆர்டர்கள் வழங்குவதில்லை என்பதாலும் சூரத் நகரில் அநேகமாக அனைத்து தொழிற்சாலைகளுமே மூடிக்கிடக்கின்றன என்று சொல்லும் அளவிற்கு நிலைமை உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

மற்றொரு புறத்தில், ஊரடங்கிற்கு முன்பு உற்பத்தியான ஜவுளிகளும் விற்பனை ஆகாமல் மலைபோல் தேங்கி இருக்கிறது. இதனால் ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளியை விற்க முடியாமலும், புதிய உற்பத்திக்கான மூலதனமோ, ஆர்டர்களோ இல்லாமலும் பல வகைகளில் சூரத் ஜவுளி உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.ஊரடங்குத் தளர்வுக்குப்பின் தொழிற்துறை பழைய நிலைக்கு வேகமாகத் திரும்பி வருவதாக மத்திய பாஜக அரசு கூறினாலும், இந்தியாவின் மிக முக்கியமான தொழில் நகரமான சூரத்திலேயே 90 சதவிகித நிறுவனங்கள் மூடித்தான் கிடக்கின்றன. இந்த மோசமான நிலையிலிருந்து எப்படி மீண்டும் வரப் போகிறோம் என்பதே அங்குள்ள உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் ஏக்கமாக மாறியிருக்கிறது.