சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியில், கொல்கத்தா அணியை வீழ்த்தி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கத்தில், ஐபிஎல் டி20 போட்டியின் 23-வது லீக் ஆட்டம் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.
முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரஸல் அதிகபட்சமாக 50 ரன்களை எடுத்தார். சென்னை அணியின் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இதை அடுத்து 109 என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் டு பிளிஸ்சிஸ் 43 ரன்னும், அம்பதிராயுடு 21 ரன்னும் எடுத்தனர். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.