சென்னை மாநகரில் மிக வேகமாக பரவி உயிர்பலி வாங்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் குறித்து மக்கள் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.இந்த வைரஸ் தாக்கிய 100 பேரில் ஐந்து பேர் மரணத்தை தழுவுகின்றனர். அப்படி இறப்பவர்களின் உடல்கள் நமது இல்லங்க ளுக்கு திரும்ப வருவதில்லை. இவ்வளவு ஏன்? முகத்தைகூட கடைசியாக ஒரு முறை பார்க்க அனுமதிப்பதில்லை. ஸ்மார்ட் போன் இருந்தால், இறந்தவரின் உடலை வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்து
கொள்ள முடிகிறது.விலைமதிக்க முடியாத உயிர்களை சூறையாடிக் கொண்டிருக்கும், இந்த கொடிய வைரஸிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு பாடம் புகட்டுகிறது.
தமிழ்நாட்டில் குறைந்தது 50 விழுக்காடு கோவிட் -19 இறப்பு தொற்று ஏற்பட்ட 48 மணி நேரத்திற்குள் நிகழ்ந்திருப்பதை நமது சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் தரவுகள் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அரசுத் தலைமை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து 10- க்கும் அதிகமாக மரணங்களை பதிவு செய்திருக்கிறது. (ஆனால், வழக்கம்போல் வைரஸ் பாதிப்பினால் மரணம் இல்லை என்று மாநில அரசும், சுகாதாரத் துறையும் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்கிறது). இது தினசரி இறப்பு விகிதத்தைக் காட்டிலும் அதிகமாகும்.
நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு அல்லது அறிகுறியுடன் ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற சில மணி நேரங்களிலேயே இறந்து விடுகிறார். இதுபோன்ற சம்பவம் ஓரிரு நாட்களாக சென்னையில் அதிகரித்து வருவது அச்சத் தில் மக்களை உறைய செய்துள்ளது.“வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களில் தேசிய அளவில் மூன்று விழுக்காட்டினர் மரணம் அடைந்துள்ளனர். மிகக் குறைவான வைரஸ் தொற்று பாதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள மாநிலங்களில் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் 6.89 சதவீதம் இறப்புகள், குஜராத் (6.17). தமிழ்நாட்டில் இறப்பு விகிதம் கேரளாவுடன் கிட்டத்தட்ட சமமாக (0.7) உள்ளது” என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிக்கொள்ளலாம்.
கொரோனா வைரஸ் குறித்து 100 விழுக்காடு எச்சரிக்கை உணர்வுடன் செயல் பட வேண்டியது கட்டாயத் தேவையாகும். அவசியமான பணிகளுக்கு வெளியில் சென்று வீட்டுக்கு திரும்பும் அனைத்து வயதினரும் கிருமி நாசினி மூலம் தங்கள் கை - கால்களை தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும். பணிபுரியும் இடங்கள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கும் துக்க நிகழ்வுகளுக்கு செல்லும் ஒவ்வொருவரும் தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியமாகும்.
பரிசோதனை, முன்கூட்டியே கண்டறிதல், தனிமைப்படுத்துதல் மட்டுமே இறப்புகளைத் தடுக்கும் என்று மாநில முதலமைச்சரும் சுகாதாரத்துறை அமைச்சரும் ‘வெறும் வாயால் வடை’ சுட்டுக் கொண்டே இருப்பதை மருத்துவ நிபுணர்கள் பலரும் எடுத்துக்காட்டுகின்றனர்.“மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் ஒருவர் பலியாகிறார் என்றால் கோவிட்-19 அறிகுறி மிகவும் தாமதமாக கண்டறியப்படுவதற்கான அறிகுறி யாகும். மருத்துவர்கள் கோவிட் -19 சோதனை முடிவுகளைப் பெறுவதற்கு முன்பே அவர்கள் மரணம் அடைந்து இருக்கலாம் ”என்று தொற்று நோய் நிபுணர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிநாதன் தெரிவித்திருக்கிறார்.
“நாங்கள் போதுமான அளவு சோதனை செய்யாததால் கோவிட் -19 இறப்புகள் பலதும் மாரடைப்பாக பதிவு செய்யப் பட்டுள்ளன ”என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது சென்னையில் உள்ள இறப்பு விகிதம் ஜூன் மாத இறுதிக்குள் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் சுகாதாரத் துறை வல்லுநர்கள் பலரும் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.நடுத்தர வயதினரை உள்ளடக்கிய ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப் பட்ட சில மணி நேரங்களில் மரணம் அடைந்து வருவது அந்தத் துறையின் செயல்பாடுகள் மீது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.ஒழுக்கநெறி விகிதம் அப்படியே இருந்தாலும், வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் போது அதிக மக்கள் பலியாகி விடுவார்கள் என்று நிபுணர்களின் எச்சரிக்கையை புறம் தள்ளாமல் சுகாதாரத் துறையும், அரசும் முனைப்புடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
===ஸ்ரீராமுலு===
ஆதாரம்: டைம்ஸ் ஆப் இந்தியா