கோவையில் வலிமை திரைப்படம் வெளியான திரையரங்கத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் பிப்.24 ஆம் தேதி வெளியானது. தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்கள், பட்டாசு வெடித்தும் நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் கோவையில் 100 அடி சாலையில் உள்ள கங்கா திரையரங்கம் முன் பிப்.24 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். பெட்ரோல் குண்டு இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட பகுதியில் விழுந்து வெடித்தது. இதில் ஒரு இருசக்கர வாகனம் லேசான சேதம் அடைந்தது. அங்கு நின்று கொண்டு இருந்த ராமச்சந்திரன் என்பவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது.
அதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் லட்சுமணன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் குடிபோதையில் ரசிகர்களிடம் தகராறில் ஈடுபட்டதை தட்டி கேட்டதால் ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிய வந்தது.