திருவாரூர், மார்ச் 23 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி 11 ஆவது வார்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் சிபிஎம் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே.ஜி.ஆர்.ராமலோக ஈஸ்வரி. இவரது கணவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளராகவும் உள்ளார். நகர் மன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற இராமலோக ஈஸ்வரி திமுக மற்றும் சிபிஎம் கட்சிகளிடையே ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் திருத்துறைப்பூண்டி நகர்மன்ற துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். துணைத் தலைவர் தேர்விற்கான தேர்தல் நடைபெறவிருந்த மார்ச் 2 ஆம் தேதியன்று அதிகாலை 3.30 மணியளவில் இராமலோக ஈஸ்வரியின் வீட்டு முகப்பில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. தூக்கத்தில் இருந்து எழுந்துவந்து பார்த்த போது, இவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்ற ஐயம் உருவானது. இந்த செய்தி உடனடியாக ஊடகங்களில் ஒளிபரப்பானது. இதில் நடவடிக்கை எடுக்க வலியுறத்தி தலைமைச் செயலகத்தில் இருந்தும் காவல்துறை தலைவரிடம் இருந்தும் உத்தரவுகள் வந்தன. சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி நகர காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் நான்கு நபர்களுக்கு சம்மன் அளிக்கப்பட்டு விசாரித்தனர். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி நகர திமுக நிர்வாகிகள் கூட்டம், அவைத்தலைவர் வீ.சிதம்பரம் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர்மன்ற துணைத் தலைவர் வேட்பாளராக போட்டியிட இருந்த இராமலோக ஈஸ்வரியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்பட்ட புகாரின் மீது காவல்துறையினர் விரைவான புலன் விசாரணை செய்து உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். கழகத்திற்கும் கழக ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்திய சமூக விரோத சக்திகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தியும் கட்சியின் நகர செயலாளர் கே.கோபுவும் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். காவல்துறை விரைவான நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், இந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து விரைவில் மக்களை திரட்டி காவல்நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தனர். மேலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளன. இதன் காரணமாக காவல்துறையின் புலன் விசாரணை தீவிரமடைந்துள்ளது.