tamilnadu

img

ரூ.2.30 லட்சம் கோடியும்! ரூ.1.25 லட்சம் கோடியும்!

ரூ.2.30 லட்சம் கோடியும்! ரூ.1.25 லட்சம் கோடியும்!

புதுதில்லி 20 ஆண்டுகால மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (MGNREGS, 2005) சிதைக்கும் நோக்கத்தில், விபி-ஜி ராம் ஜி (விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கத்திற்கான உத்தரவாதம் - கிராமின்) என்ற புதிய திட்டத்தை கடந்த 2025 டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மோடி அரசு சட்டமாக மாற்றியது.  60 நாட்கள் கட்டாய விடுப்பு, 60:40 விகிதம் (மத்திய 60%, மாநிலம் 40%) நிதிப்பங்கீடு என பல்வேறு முரண்பாடு, வேலைவாய்ப்பை நம்பி உள்ளவர்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் இந்த விபி-ஜி ராம் ஜி திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஆனால் ஞாயிறன்று அறிவிக்கப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில், விபி-ஜி ராம் ஜி திட்டத்திற்கு ரூ.95,692.31 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விபி-ஜி ராம் ஜி திட்டம் அமலுக்கு வராததால், பழைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ.30,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 2 திட்டங்களுக்குமான மொத்த ஒதுக்கீடு ரூ.1,25,692.31 கோடி ஆகும். இது 2025-26ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் திட்டத்தின் திருத் தப்பட்ட மதிப்பீடான ரூ.88,000 கோடியுடன் ஒப்பி டும்போது, 2026-27ஆம் ஆண்டின் பட்ஜெட் அறிவிப்பு அதிகமாகத் தெரியும். ஆனால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு தித் திட்டத்திற்கு கீழ் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் 125 வேலை நாட்களை வழங்கும் அரசாங்கத்தின் இலக்கை எட்ட இந்த ஒதுக்கீடு போதாது என குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.  52 நாள் தான் வேலை தரமுடியும் இதுதொடர்பாக பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மோடி அர சாங்கம் ஊரக வேலைவாய்ப்பை விபி-ஜி ராம் ஜி மூலமாக 100 நாட்களிலிருந்து 125 நாட்க ளாக உயர்த்தியுள்ளது. ஆனால் அதற்கேற்ப பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. நாட்டில் சுமார் 8.65 கோடி குடும்பங்கள் ஊரக வேலையை நம்பியே உள்ளனர். இவர்களுக்கு சராசரி கூலியான ரூ.355 வீதம் 125 நாட்கள் வேலை வழங்க வேண்டுமெனில், ஆண்டுக்கு சுமார் ரூ.3.83 லட்சம் கோடி தேவைப்படும். ஒன்றிய அரசு (60%) : மாநிலங்கள் (40%) என்ற விகிதப்படி, விபி-ஜி ராம் ஜி திட்டத்திற்கு சம்பளம் வழங்கப்படுகிறது. 60:40 விகிதப்படி பார்த்தால் கூட, ஒன்றிய அரசு மட்டும் ரூ.2.30 லட்சம் கோடி வழங்க வேண்டும். ஆனால், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருப்பது ரூ.1.25 லட்சம் கோடி மட்டுமே. இந்த நிதியைக் கொண்டு கணக்கிட்டால், ஒரு குடும்பத்திற்கு வெறும் 52 நாட்கள் மட்டுமே வேலை வழங்க முடியும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாநிலங்களுக்கு  தீவிர நெருக்கடி உருவாகும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை தமிழ்நாடு, கேரளம் ஆகிய 2 மாநிலங்கள் தான் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன. ஒன்றிய பட்ஜெட்டில் விபி-ஜி ராம் ஜி திட்டத்திற்கு (2 திட்டங்களுக்கும் சேர்த்து) மிக குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது கணிப்பின் படி, ஆண்டிற்கு ஊரக வேலை வாய்ப்பு சுமார் ரூ.3.83 லட்சம் கோடி தேவைப் படும் என்று கூறப்படுகிறது. ஒன்றிய பட்ஜெட் டில் ரூ.1.25 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட் டுள்ளது. பட்ஜெட் ஒதுக்கீடு போக ரூ.2.58 லட்சம் கோடி தேவை என்ற சூழல் உள்ளது. அதனால் இந்த தொகையை மாநில அரசுகள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.