அமெரிக்கா நடவடிக்கையைக் கண்டித்து சென்னையில் இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் ஆர்ப்பாட்டம்
சென்னை, ஜன.11- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவைக் கடத்திய அமெரிக்காவைக் கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சனிக்கிழமையன்று (ஜன. 10) அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சுதந்திர நாட்டின் ஜனாதிபதியை விலங்கிட்டு கடத்திச் செல்வது உலகப் பயங்கரவாதம். டிரம்ப் உலக ரவுடியாகச் செயல்படுகிறார். பயங்கர வாதத்தை எதிர்க்கும் மோடி, அமெரிக்கா வின் இந்தச் செயலை இதுவரை கண்டிக்காதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி உயர்வு குறித்துப் பேசுகையில், “அமெரிக்காவின் 500 சதவீத வரி விதிப்பால் ஒட்டுமொத்த இந்திய வர்த்தகமும் சுடுகாடாக மாறும் நிலை உள்ளது. இந்திய மக்களைக் காவு கொடுக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு அமெரிக்காவிற்கு அடிபணிந்து செயல்படுகிறது” எனச் சாடினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர்கள் ஐ.ஆறுமுக நயினார், டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
