கோவையில் ATM மையம் அமைக்க உரிமம் வாங்கித்தருவதாகக் கோரி லட்சக்கணக்கில் மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர ஆணையரிடம் புகார் அளித்தனர்.
கோவை நவஇந்தியா பகுதியில் செயல்பட்டு வந்த ZPE ATM என்ற தனியார் நிறுவனம், ஏடிஎம் மைய உரிமம் பெற்றால் அதிக லாபம் கிடைக்கும் என இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடந்த 2023ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து விளம்பரம் செய்து வந்துள்ளது.
இதன்படி, ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்தால் ஏடிஎம் இயந்திரம் வழங்கப்படும், ஒவ்வொரு மாதமும் லாபத் தொகையும், பரிவர்த்தனை அடிப்படையில் கமிஷனும் வழங்கப்படும் என நிறுவனத்தினர் வாக்குறுதி அளித்துள்ளனர். ஏடிஎம் மைய வாடகையில் 60% நிறுவனமும், 40% பயணாளியும் செலுத்த வேண்டும்; பரிவர்த்தனையில் கிடைக்கும் லாபத்திலும் அதே விகிதத்தில் பகிர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த விளம்பரத்தை நம்பி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பலர் முதலீடு செய்துள்ளனர். ஒவ்வொருவரிடமும் ரூ.2 லட்சம் வரை வைப்பு தொகையாக பெற்று பத்திரம் வழங்கியுள்ளனர். சிலருக்கு ஏடிஎம் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. ஆனால் அவை ஒரு வாரத்திற்கும் குறைவாகவே செயல்பட்டு நிறுத்தப்பட்டதாகவும், பணம் நிரப்ப யாரும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
பலர் முதலீடு செய்தும் இயந்திரம் வழங்கப்படாமல், பணத்தையும் திருப்பி அளிக்காமல் நிறுவனம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சுமார் 76 பேர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்து, உரிமையாளர்கள் துரைசாமி மற்றும் ரம்யா துரைசாமியை கைது செய்து பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.
இதேபோல் கேரளாவைச் சேர்ந்த ஒரு தனியார் தொழில் ஆலோசனை மையத்தின் ஊடாக 10 முதலீட்டாளர்கள் ரூ.17.50 லட்சம் முதலீடு செய்தும் இயந்திரம் அல்லது பணம் எதுவும் திரும்ப அளிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.