கோயம்புத்தூர்:
பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முருகன் பணி ஓய்வு பெற்றவுடன் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் அறையிலேயே பாஜகவில் இணைந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பல்கலைக்கழக சின்டிகேட் உறுப்பினர்களாக அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் இடம்பெறக்கூடாது என்று கடும் எதிர்ப்பு எழுந்த நிலையிலும், பாஜகவின் கனகசபாபதிபல்கலைக் கழக சின்டிகேட் உறுப்பினராக இணைக்கப்பட்ட நிலையில், தற்போது பல்கலைக்கழக அலுவல் அறைகள் பாஜகவின் கட்சி அலுவலகங்களாக செயல்படுவ தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும், விலங்கியல் துறை தலைவராகவும் இருந்தவர் முருகன். இவர் கடந்த 30ம் தேதி பணியில் இருந்து ஓய்வுபெற்றார். பணி ஓய்வு பெற்றதற்கு மறுநாள் பல்கலைக்கழகத்திற்கு தனது பொருட்களை எடுக்க வந்துள்ளார். அப்போது பாஜகவில் உறுப்பினராக மிஸ்டு கால் கொடுங்கள் என்று பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இவர் மிஸ்டு கால் கொடுத்த உடன் அன்றைய தினமே, துணைவேந்தர் அறையில் வைத்து பாஜக மாநில இளைஞரணி செயலாளர் ப்ரீத்தி லட்சுமி மற்றும் மாநில ஊடகப் பிரிவு செயலாளர் சபரி கிரீஸ் ஆகியோர் பாஜகவில் முருகன் இணைந்ததற்கான அடையாள அட்டையினை வழங்கினர்.
இதனையடுத்து, ஓய்வுபெற்ற பதிவாளர் முருகன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தை தனது முகநூல் பக்கத்தில் அக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் பிரீத்தி லட்சுமி வெளியிட்டு இருந்தார். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அறையில் ஓய்வுபெற்ற பதிவாளர் முருகன் பாரதிய ஜனதா கட்சியில் இணைக்கப்பட்ட விவகாரம்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், மேற்படி முருகன், கட்சியில் சேர்ந்து 3 நாட்களிலேயே வெளியேறியிருப்பதும் தெரிய வந்துள்ளது.