tamilnadu

img

அதிகரிக்கும் ஆணவப் படுகொலைகள் நீதிமன்ற உத்தரவை அமலாக்காத மாநில அரசு ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கோயம்புத்தூர், ஜூன் 29- மேட்டுப்பாளையம் சாதி ஆணவப் படுகொலை சம்பவத்தில் படுகாயம் அடைந்த இளம்பெண் வர்ஷினி பிரியா, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கோவை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, உயிரிழந்த வர்ஷினி பிரியா குடும் பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.  இதனைத்தொடர்ந்து செய்தி யாளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், “இந்த கொலை சம்ப வத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் கைது வேண்டும். உடுமலை சங்கர், கோகுல்ராஜ், இளவரசன் என  மேற்கு மண்டலத்தில் சாதி ஆணவப் படுகொலைகள் அதிகரித்து  வருவது வேதனையளிக்கிறது. இந்த கொலை  சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும், குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். சாதி மறுப்பு  திருமணம் செய்தவர்களுக்கு உரிய பாது காப்பு வழங்க வேண்டும். சாதிய ஆணவப் படுகொலைகளை தடுக்க காவல்துறையில் தனிப்பிரிவு துவங்க வேண்டும் என்று ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு இத்தீர்ப்பினை நடைமுறைப்படுத்த எவ்வித முயற்சியும் இதுவரை மேற் கொள்ளவில்லை. இப்போதாவது உடனடியாக நீதிமன்ற உத்தரவை அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். முன்னதாக, ஜி. ராமகிருஷ்ணனுடன் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா,  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை  பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், தமிழ்புலிகள் அமைப்பின் மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட தலைவர்களும் வர்ஷினி பிரியாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.