tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி: தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சி ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கோயம்புத்தூர், மே 14-தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே வேதாந்தா நிறுவனம் 25 ஆயிரம் சதுர கிலோமீட்டர் தூரம் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். கோவை சூலூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிசாமியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிர களப்பணியாற்றி வருகிறது. இதன் ஒருபகுதியாக திங்களன்று பிரச்சாரம் மேற்கொள்ள கோவைக்கு வருகை புரிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிசாமிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழகத்தில் அனைத்து நாடாளுமன்றத் தொகுதியிலும் மகத்தான வெற்றி பெறும். இதைப்போலவே ஏற்கனவே வாக்குப்பதிவு நடைபெற்ற 18 சட்டமன்ற  இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெறும். மேலும், வருகிற 19 ம் தேதி நடைபெறும் சூலூர் உள்ளிட்ட 4 தொகுதி இடைதேர்தல்களில் திமுகவிற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. ஆகவே, சட்டமன்றத் தொகுதிக்கான 22 இடங்களை திமுக கைப்பற்ற உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது. மத்திய அரசு புதுச்சேரி முதல் மன்னார் வளைகுடா பகுதி வரையில் 25 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வேதாந்தா நிறுவனத்திற்கு 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ளது. தூத்துக்குடியில் எந்த ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக மக்கள் போராடுகின்றனரோ, எந்த நிறுவனத்திற்காக அப்பாவி மக்கள் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனரோ அந்த வேதாந்தா குழுமத்திற்கு மத்திய அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் உயர்மின் கோபுரங்களுக்கு அனுமதி அளித்து மேற்கு மாவட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுகிறது. 8 வழிச் சாலை, நீட் தேர்வு போன்ற மக்களுக்கு எதிரான செயல்களை இந்த தமிழக அரசு தடுக்கவில்லை. மாறாக தமிழகத்தின் உரிமைகள் பறிக்க மாநில அரசு பச்சைக்கொடி காட்டுகிறது. சுருங்கச் சொன்னால் மோடியின் எடுபிடி அரசாக அதிமுக நடந்து வருகிறது. மத்திய அரசு திணிக்கும் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது எந்த திட்டத்தையும் அறிவிக்கக்கூடாது என்பதையும் மீறி இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதனைத் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. எதிர்க்கட்சிகள் சிறிய தவறு செய்தால்கூட அதனை பெரிதுபடுத்தி காட்டும் தேர்தல் ஆணையம், ஆளும்கட்சியினர் எத்தகைய தேர்தல் விதிமுறைகளை மீறினாலும் நடவடிக்கை எடுக்க தயாரில்லை. மாநில தேர்தல் அதிகாரியும், மத்திய தேர்தல் ஆணையமும் மத்தியிலும், தமிழகத்திலும் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றன. மேலும், திமுக 22 இடங்களிலும் வெற்றி பெற்றுவிட்டால், எடப்பாடிஅரசு நீடிக்க முடியாது என்கிற அச்சம் இபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பீதி காரணமாக 3 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தோல்வி பயத்தில் என்ன செய்கிறோம் என்பதை தெரியாமலேயே பதற்றத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.