tamilnadu

img

கோவை: போராட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து ஊழியர்கள் கைது!

அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். 
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே, அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் என 150க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசை கண்டித்து கோசங்களை எழுப்பினர். உடனடியாக அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். சி.ஐ.டி.யு  மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் மனோகரன், அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் துணை பொதுச்செயலாளர் எம்.கனகராஜ், கோவை  அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்க மாவட்ட  தலைவர் பரமசிவம், பொதுச்செயலாளர் வேளாங்கன்னி ராஜ், பொருளாளர் மனோஜ்குமார், நிர்வாகி அருணகிரிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும்  சிறை நிரப்பும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 195 போக்குவரத்து ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து பேசிய அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் பொதுச்செயலாளர் எம்.கனகராஜ் கூறியதாவது : 
அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு,  நடைபெற்று வருகிறது.  கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் மற்றும் பணியாற்றக்கூடிய ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறோம். குறிப்பாக ஓய்வு பெற்ற ஊழியர்களின் பணப் பலன்களை இரண்டு ஆண்டுகளாக அரசு கொடுக்கவில்லை.  அதுவே ரூ.4000 கோடி அரசு பாக்கி வைத்துள்ளது.  சட்டபூர்வமாக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 30 நாட்களில் பண பலன்களை வழங்க வேண்டும். இது  தனியார் நிறுவனத்திற்கே  பொருந்தும் என்றால்,  அரசு துறை நிறுவனத்திற்கு எப்படி பொருந்தாமல் இருக்கும்.  இது ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் முக்கிய பிரச்சினையாக உள்ளது. தமிழகத்தில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்கள் 90 ஆயிரம் பேர் உள்ளனர்.  அவர்களுக்கு அகவிலைப்படி 5% மட்டுமே கொடுக்கிறார்கள்.  ஆனால் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு 56 சதவீதம் அகவிலைப்படி வாங்குகிறார்கள். ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க கோரி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், அரசு மேல்முறையீடு செய்து அதுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,  கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அரசு அகவிலைப்படி கொடுக்க மறுத்து வருகிறது. இது 90 ஆயிரம் ஓய்வு பெற்ற ஊழியர்களின் பிரச்சனையாக உள்ளது.  இதன் காரணமாகத்தான் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் சிறை நிரப்புப் போராட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்று உள்ளனர். அதேபோல் வரவுக்கும் செலவுக்குமான இடைவெளியை அரசு வழங்க வேண்டும் என்பது எல்.பி.எப் உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. மேலும் கடந்த நிதிநிலை அறிக்கை தாக்களின் போது மெட்ரோ திட்டத்திற்கு ரூ.36,000 கோடி,  மின்சாரத்துறைக்கு ஒரு லட்சம் கோடி என தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. ஆனால் வெறும் பத்தாயிரம் கோடி வழங்கினால் போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சனை முடிவுக்கு வரும் ஆனால் அதனை கொடுக்க மறுக்கிறார்கள். மாநில அரசு எங்களது பிரச்சனைக்கு உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும். எங்களது போராட்ட அறிவிப்புக்கு பிறகு போக்குவரத்து துறை ஊழியர்கள் சங்கத்தினை பேச்சுவார்த்தை  அழைத்துள்ளனர். பணியில் உள்ள ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளாக இருந்து, நான்கு ஆண்டுகளாக மாறியது. தற்போது ஐந்தாண்டுகளாக மாற உள்ளது. ஆனாலும் ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை இதுவரை நடைபெறவில்லை. உடனடியாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.