மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே பவானியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நீர்த்தேக்க பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் நீரில் மூழ்கின.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பேரூராட்சிக்கு உடபட்ட பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியான லிங்காபுரம், காந்தவயல் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் கதலி, ரோபஸ்டா, நேந்திரன் ஆகிய வாழைகளை பயிரிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கேரளா மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் உள்ள வாழை தோட்டங்களுக்குள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கியதால், விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.