பூட்டை உடைத்து நகை கொள்ளை
சென்னை, அக்.22- ஓட்டேரி ஏகாந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (52). இவர் தண்டையார்பேட்டையில் உள்ள ரயில்வே அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார். யுவராஜ் சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சேலத்தில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் யுவராஜ், செவ்வாயன்று இரவு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 8 சவரன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்.கே. நகரில் மழைநீர் கால்வாயில் ஆண் சடலம்
சென்னை, அக். 22- ஆர்.கே.நகரில் மழைநீர் கால்வாயில் கிடந்த ஆண் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.கே. நகர் அருகே உள்ள சிவாஜி நகர் ரயில்வே தண்டவாளம் அருகே செல்லும் மழைநீர் கால்வாயில் சுமார் 45 வயதுடைய ஆண் சடலம் புதனன்று காலை மிதந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழைநீர் சேகரிப்பு குளங்களை தொடர உயர்நீதிமன்றம் அனுமதி
சென்னை, அக்.22 - அரசு கையகப்படுத்திய சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழைநீர் சேகரிப்பு குளங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுமார் 160 ஏக்கர் பரப்பளவுள்ள கிண்டி ரேஸ் கிளப் இடத்திற்கு ரூ.730 கோடியே 86 லட்சம் வாடகை பாக்கியை செலுத்தும்படி சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது. வாடகை செலுத்தத் தவறியதால், நிலத்தை அரசு கையகப்படுத்தி மக்களின் பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, 118 ஏக்கர் பரப்பள வில் பசுமைவெளி பூங்கா அமைக்கவும், மழை நீரை சேமிக்க நான்கு குளங்கள் அமைக்க வும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டங்களை எதிர்த்தும், நிலத்தை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்தும் ரேஸ் கிளப் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. தனி நீதிபதி குமரேஷ் பாபு, நிலம் கையகப்படுத்தப்பட்டபோதைய நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் முகமது ஷபிக் அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. ரேஸ் கிளப் சார்பில் மூத்த வழக்கறிஞர் அர விந்த் பாண்டியன், நீதிபதி சுப்பிரமணியம் ஏற்கனவே இந்த வழக்கில் தீர்ப்பளித்ததால் வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என வாதிட்டார். அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.6,500 கோடி என்றும், வாடகை பாக்கி ரூ.1,200 கோடி நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். பொதுநலன் கருதியே திட்டங்கள் தொடங்கப்பட்டதாகவும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பொதுநலன் கருதி தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர். தற்போது மழைக்காலம் என்பதால் மழைநீர் சேகரிப்பு திட்டம் அவசியம் என குறிப்பிட்டு, திட்டங்களை தொடர அனு மதி அளித்தனர். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2ஆவது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
செங்கல்பட்டு, அக்.22- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், வங்க கடலில் உருவாகியுள்ள காற்ற ழுத்தாழ்வு நிலையால் கனமழை பெய்து வருகிறது. மேலும், கடல் சீற்றத்துடன் காணப்படு வதால் மீனவர்கள் யாரும் மறு உத்தரவு வரும் வரையில் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரி வித்துள்ளது. இதனால், கடலோர மாவட்ட மாக விளங்கும் செங்கல்கல்பட்டு மாவட்ட த்தில் உள்ள கோவளம், மாமல்லபுரம், மெய்யூர் குப்பம், சதுரங்கப்பட்டினம் குப்பம், புதுப்பட்டிணம் குப்பம், உய்யாளி குப்பம், கடலூர் சின்ன குப்பம், சூளேரிக்காடு, கொக்கிலமேடு போன்ற மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், 2வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால், சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு கள் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், காற்றழுத்தாழ்வு நிலை புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.