தொழில் செய்து வந்த கடைக்குள் புகுந்து ரூ20 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிக்கொண்டு, கடையை பாஜக அலுவலகமாக மாற்றியுள்ளதாகவும், அண்ணாமலையின் உத்தரவின் பேரிலேயே இச்சம்பவம் நடைபெற்று இருப்பதாக பாஜகவினர் மீது அக்கட்சியின் உள்ளாட்சி பிரிவு மாநில செயலாளர் ஒருவரே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சாய்பாபா காலனி ராமலிங்கம் நகர் பகுதி சேர்ந்தவர் அண்ணாதுரை (47). இவர், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழனன்று புகார் அளித்தார். இதில், அவர் தெரிவித்திருப்பதாவது, நான் பாஜக-வின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக பணியாற்றி வருகிறேன். உணவகங்களுக்கு மூலிகை பொருட்கள் வழங்கி வருகிறேன். சாய்பாபா காலனி பகுதியில் எனது பணிகளுக்காக, பழனிச்சாமி என்பவரின் கட்டடத்தில் வாடகை அடிப்படையில் கடையை நடத்தி வருகிறேன். எழுத்து பூர்வமாக வாடகை ஒப்பந்தமும் செய்து கொண்டோம். கட்டடத்தை சீரமைக்க நான் 4 லட்சம் ரூபாய் செலவு செய்து இருக்கிறேன். இதற்கிடையே, பழனிச்சாமியின் மகள் பிருந்தா என்பவர் வாடகை கட்டடத்தில் இருக்கும் எனது கடை மற்றும் அலுவலகத்திற்கு வந்து வாடிக்கையாளர்களை தடுப்பது, மின் இணைப்பை துண்டித்தல் போன்ற செயல்பாடுகளை செய்து வந்தார். இதனால், எனக்கு 15 லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஆகிவிட்டது. இந்நிலையில், நான் சென்னையில் இருப்பதால் கோயமுத்தூரில் உள்ள எனது நிறுவனத்தில் சிசிடிவி கேமரா பொருத்தி சென்னையில் இருந்து எனது வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது, 23 ஆம்தேதி காலை 8 மணி அளவில் பாரதிய ஜனதா கட்சி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாவட்ட பாஜக தலைவர் உத்தமராமசாமி, பொது செயலாளர் செந்தில் ஆகியோர் தூண்டுதலின் பேரில் 20க்கும் மேற்பட்ட பாஜகவினர் எனது அலுவலகத்திற்கு வந்து, கதவு, பூட்டுகளை உடைத்து சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள பல்வேறு பொருட்களை எடுத்து சென்று விட்டார்கள். இதனையறிந்து சென்னையில் இருந்து கோவை வந்து இது தொடர்பாக நான் கேட்டபோது எனக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். எனது கடை அலுவலகத்தில் இருந்த பொருட்கள் எங்கே சென்றது என தெரியவில்லை. நான் பயன்படுத்திய அலுவலகத்தை பாஜக சேவா மையமாக மாற்ற திட்டமிட்டு இது போன்ற செயல்களை செய்திருக்கிறார்கள். இதுகுறித்து நான் கேள்வி எழுப்பியபோது, உனக்கும் இந்த இடத்துக்கும் சம்பந்தமில்லை. ஏதாவது இருந்தாலும் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பேசிக் கொள் என என்னை மிரட்டுகிறார்கள். எனவே, பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் உத்தம ராமசாமி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, நான் வெளிப்படையாக புகார் அளித்திருப்பதால் அவர்கள் என் மீது என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுப்பார்கள். போலீசார் எனக்கு பாதுகாப்பு அளித்து உரிய முறையில் இதனை விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.