கோவை ஒண்டிப்புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் கிடைக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புஷ்பா வீட்டு வேலைக்குச் சென்று வந்தார். இவர்களுக்கு ஹரிணி (9), மற்றும் ஷிவானி (3) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் தங்கராஜ் மற்றும் புஷ்பா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று இரவு தங்கராஜ் வெளியே சென்ற நிலையில் புஷ்பா தனது குழந்தைகளோடு வீட்டில் இருந்துள்ளார். காலை 8 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பு இருந்த கீழ் நிலை தொட்டியில் புஷ்பா மற்றும் குழந்தைகள் ஹரிணி, ஷிவானி ஆகிய மூவரும் சடலமாக மிதந்தது தெரியவந்தது. இதைக் கண்டு தங்கராஜ் சத்தம் போட்டுள்ளார். பின்னர் அங்கு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து விட்டு சிங்காநல்லூர் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாகக் கணவர் தங்கராஜை காவல்துறையினர் அழைத்துச் சென்று கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.