கோவை புறநகரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 18 தாபாக்களுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்
கோவை புறநகரப் பகுதிகளான கோவில்பாளையம், அன்னூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி தாபா என்ற பெயரில் குடில் ஏராளமான உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தாபா உணவகங்களில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாகத் தொடர் புகார்கள் எழுந்தன. இவனை எடுத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் மற்றும் கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
காவல்துறை நடத்திய சோதனையில் அன்னூர் பகுதியில் செயல்பட்ட 3 தாபாக்களில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுக் கூடுதல் விலைக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று தாபாக்களையும் காவல்துறை உதவியுடன் அன்னூர் வட்டாட்சியர் குமரி ஆனந்தன் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் பூட்டுப் போட்டு சீல் வைத்தனர். இதே போல மேட்டுப்பாளையம், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த 18 தாபாக்களுக்கு காவல்துறை உதவியுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாகச் சீல் வைத்தனர்.