உலகிலேயே முதல் முறையாக கோவையில் ஒரே இடத்தில் 1,500 பேர் சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
கோவை பேரூர் அடுத்த தீத்திபாளையம் பகுதியில் உள்ள சி.எம்.சி இன்டர்நேஷனல் பள்ளி மைதானத்தில், ஃபைட்டர்ஸ் அகாடமி மற்றும் ஹையாசிகா கராத்தே அமைப்பு இணைந்து சிலம்பம் மற்றும் கராத்தே சாதனை செய்யும் நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. அதில் 4 வயது சிறுவர்கள் முதல் 50 வயதுடைய நபர்கள் என 1,500 பேர் ஒரே நேரத்தில் தொடர்ந்து 45 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
இதற்கென சென்னை, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்த சிலம்பக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிலம்பம் சுற்றினர். இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க இருக்கிறது.
இளம் தலைமுறையினருக்கு விளையாட்டின் மீது ஆர்வம் செலுத்துவதை ஊக்குவிக்கவும், செல்போன், இணையதளம் மற்றும் போதை பொருட்கள் பக்கம் செல்லாமல் இருக்கவும், இளைஞர்கள் உடல் நலம் மற்றும் மனநிலையை மேம்படுத்த விளையாட்டுப் போட்டிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை அனைத்து இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லவே இந்த சாதனை முயற்சி என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.