கோவை, மார்ச் 30-
தொழிலாளர் நல சட்டங்களை திருத்திய மோடி அரசுக்கு முடிவு கட்டுவோம் என கோவையில் சனியன்று நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.கோவை கமலம் துரைசாமி திருமண மண்டபத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான சிறப்புபேரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தொமுச மாநில துணை தலைவர் மு.ரத்தினவேலு தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டதலைவர் ஆறுமுகம் வரவேற்று பேசினார்.சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் சிறப்புரையாற்றினார். ஐஎன்டியுசி மாநிலசெயலாளர் வி.ஆர்.பாலசுந்தரம், எம்எல்எப்மாவட்ட துணை தலைவர் வி.கே.எம்.ஷாஜஹான் மற்றும் எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் ஆர்.கே.தேவராஜன் ஆகியோர் தேர்தலில் தொழிற்சங்கத்தினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விளக்க உரையாற்றினர். சிஐடியு மாநில பொது செயலாளர் ஜி.சுகுமாறன், கோவை தெற்கு தொகுதியின் திமுக பொறுப்பாளர் நாச்சிமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர்.மேலும், எல்பிஎப், ஐஎன்டியுசி, ஏஐடியுசி, சிஐடியு, எச்எம்எஸ், எம்எல்எப் மற்றும்எல்எல்எப் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கார்ப்பரேட் நலனைக் கருத்தில் கொண்டு சிறு, குறு தொழில்களை அழித்து தொழிலாளர் நல சட்டங்களை திருத்தியமைக்க முயலும் மோடி அரசிற்கு முடிவு கட்டுவோம் என அறைகூவல் விடுக்கப்பட்டது. நிறைவாக சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.