சேலம், ஏப். 23-மேட்டூர் நகராட்சி காண்ட்ராக்ட் துப்புரவு தொழிலாளர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து மேட்டூரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் வேலைநிறுத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. அங்கு துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள 47 காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்த ரூ.519 கூலியை வழங்காமல் வெறும் ரூ.200 மட்டுமே இதுவரை வழங்கப்பட்டு வந்தது. இநிலையில், பிப்ரவரி, மார்ச் மாத சம்பளத்தை வழங்காமல் நகராட்சி நிர்வாகம் தொழிலாளர்களை அலைக்கழித்து வந்தது. இதனை கண்டித்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சங்கத்தின் சார்பில் கிளை செயலாளர் சி.கருப்பன்னன் தலைமையில் செவ்வாயன்று மேட்டூர் பேருந்து நிலையம் முன்பு வேவைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தகவலறிந்த மேட்டூர் காவல்துறைஆய்வாளர் மற்றும் நகராட்சி செயற்பொறியாளர் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மூன்றுநாட்களுக்குள் சம்பளம் வழங்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் ஆர்ப்பாட்டம் மட்டும் விலக்கிக்கொள்ளப்பட்டது. மேலும் நகராட்சி நிர்வாகம் சம்பளம் தரும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு தொடர்ந்து வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் தலைவர் வி.இளங்கோ, சசிகலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.