உடுமலை, ஏப்.21-திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் மழை காரணமாக தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இங்கு சுற்றுலா வருபவர்களும், அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு வருபவர்களும் அருவியில் குளித்துச் செல்கின்றனர். கடந்த 2 மாதமாக வெயில் கொளுத்துவதால், அருவியில் தண்ணீர் குறைந்தளவிலேயே விழுந்தது. இதனால் திருமூர்த்திமலை வந்தவர்கள், அருவிக்குச் செல்லாமல் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்துச் சென்றனர். இதனால் நீச்சல் குளத்தில் கூட்டம் அதிகரித்தது. இந்நிலையில் வெள்ளியன்று இரவு மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்தது. இதனால் சனியன்று பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. அருவியில் தண்ணீர் அதிகளவில் கொட்டியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி மற்றும் ஆர்வத்துடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் பஞ்சலிங்க அருவி பகுதி களைகட்டியது. தண்ணீர் வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். வெள்ள அபாயம் ஏற்பட்டால் அருவிக்குச் செல்ல தடை விதிக்கப்படும். ஆனால் அதற்கான அறிகுறி தெரியவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.