திருப்பூர், ஏப். 16 -திருப்பூர் மாவட்டத்தில் சிஆர்பிஎப் உள்ளிட்ட சிறப்பு பாதுகாப்புப் படையினர் 741 பேர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமி கூறினார்.திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: திருப்பூர் மக்களவைத் தொகுதியில் 1704 வாக்குச்சாவடிகளில் 560 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. கண்காணிப்பு பணியினை மேற்கொள்ள 325 நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மாவட்டத்தில் சிஆர்பிஎப் 216, சிஆர்ஏஎப் 70, எஸ்.ஏ.எப் 140, டிஎஸ்பி 315 என 741 பேர் தேர்தல் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கண்பார்வையற்ற வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக 80 பிரெய்லி முறையிலான வாக்காளர் அடையாள அட்டைகள் தயார் செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரெய்லி முறையிலான வாக்காளர் சீட்டுகள் 568 பெறப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளது.
தீவிர கண்காணிப்பு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொத்தப்பட்டு வாகனங்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் 220 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளது. தேர்தல் தினத்தன்று வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் ஆகியோருக்கு வாக்களிக்க முன்னுரிமை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 18ஆம் தேதி மாலை 6 மணி வரை பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு ஆகியவை செயல்படும். தீவிரக் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும், தேர்தல் விதிமுறைகள் மீறல்கள் தொடர்பாகவும் பெறப்படும் புகார்கள் குறித்து, தணிக்கை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளவும் உள்ளனர்.
எல்ஆர்ஜி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம்
திருப்பூர் எல்ஆர்ஜி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைய உள்ளது. அங்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்படும். கடைசி இரண்டு நாட்கள் கடைசி நேர பணப் பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை, நிலைக்குழுக்கள் ஆகியோர் 18 ஆம் தேதி மாலை 6 மணி வரை பணியில் ஈடுபடுவார்கள். 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்கள் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 1 முதல் 5 மையங்களில் முழுக்க முழுக்க பெண்களே நடத்தும் வகையில் சிறப்பு வாக்குச்சாவடிகளும் அமைக்க உள்ளோம் என்றார்.