ஈரோடு, ஏப். 30-ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சாலையை கடந்த ஆண்சிறுத்தை குட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானைஉள்ளிட்ட பல்வேறு வகை விலங்குகள் வசித்து வருகின்றன. இதில் புலி மற்றும்சிறுத்தை போன்ற விலங்குகள் இரவு நேரத்தில் வனப்பகுதியில் உள்ள சாலையை கடந்து மற்றொரு வனப்பகுதிக்கு செல்வது வழக்கம். சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் திண்டுக்கல் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை அடர்ந்த வனப்பகுதியின் வழியாக செல்கிறது. இச்சாலையில் பண்ணாரி அருகே செவ்வாயன்று அதிகாலை சிறுத்தை குட்டி ஒன்று சாலையை கடந்த போது அவ்வழியே சென்ற வாகனம் மோதி சிறுத்தை குட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. சிறுத்தை குட்டி மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்லால் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையின் பிரேதத்தை மீட்டனர். வாகனத்தில் அடிபட்டு இறந்த சிறுத்தை ஆண்சிறுத்தை என்றும், சுமார் 6 மாதம் வயது இருக்கலாம் எனவும் பிரேதப்பரிசோதனைக்கு பின் முழுதகவல்கள் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், சிறுத்தை குட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அடர்ந்த வனப்பகுதியில்உள்ள சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிதவேகத்தில் செல்லுமாறு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.