ஈரோடு, ஏப்.1-வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்துவதாக, கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி புகார் அளித்துள்ளார். ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இந்திரா நகர், இரண்டாவது வீதியைச் சேர்ந்தவர் சாகுல் ஹபித் உம்மா (35). இவர் தனது ஏழு மாத கைக்குழந்தையுடன் வந்து புகார் பெட்டியில் மனுவை போட்டுள்ளார்.அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது, முஹமது நூர்லகான் என்பவருடன் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர் மளிகை கடை நடத்தி வருகிறார். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூறி, என்னை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது வரதட்சணையாக எனது அண்ணன் ரூ.3 லட்சமும், 5 பவுன் நகையும் போட்டனர். ஆனால் பணம் காணவில்லை என்று கூறி கணவர் அடித்து துன்புறுத்தினார். மேலும் கூடுதலாக பணம் கொண்டு வராவிட்டால் கொன்று விடுவதாகவும் மிரட்டினார். இந்நிலையில் நான் பிரசவத்திற்காக, எனது அண்ணன் வீட்டுக்கு வந்து விட்டேன். கணவர் மீண்டும் வரதட்சணை கேட்டு என்னைத் துன்புறுத்துகிறார். இந்நிலையில் கணவர் மீண்டும் முதல் மனைவியுடன் குடும்பம் நடத்துவேன் என்றும் மிரட்டுகிறார். இதனால் தற்போது எனது அண்ணன் வீட்டிலேயே வசித்து வருகிறேன். என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, என்னை அடித்து துன்புறுத்திய கணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கணவரிடம் இருந்து எனக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.