tamilnadu

img

வரதட்சணைக்கு பதிலாக ஒரு லட்சம் மதிப்பிலான புத்தகம் பரிசு

மேற்கு வங்கத்தில் வரதட்சணைக்கு பதிலாக ஒரு லட்சம் மதிப்பிலான புத்தகங்களை மணமகள் வீட்டார் பரிசாக வழங்கியது அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சூர்யகண்டா பாரிக் என்பவர் தெற்கு 24 பர்கானாவில் உள்ள சோனாபூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் தனது திருமணத்தின் போது வரதட்ணை வாங்க கூடாது என்று தீர்மானித்திருந்தார். இந்நிலையில் கிழக்கு மிட்னாபூரின் கெஜூரி பகுதியைச் சேர்ந்த முக்பெரியா கல்லூரியில் இறுதி ஆண்டு இசைபடித்து வரும் பிரியங்கா பீஜ்-ஐ கடந்த மே 14ம்தேதி திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து மணமகன் பாரிக்கிற்கு திருமண பரிசாக மணப்பெண் வீட்டினர் ஒரு லட்சம் மதிப்பிலான 1000 புத்தகங்களை கொடுத்தனர். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த பாரிக் நான் திருமணத்திற்கு வரதட்சனை வாங்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தேன். ஆனால் திருமணத்தின் போது குவியாலாக புத்தகங்கள் பரிசாக கொடுக்கப்பட்டது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் அளித்தது என்றார். மேலும் நிறைய புத்தகங்கள் பரிசாக கிடைத்துள்ளது.எனவே சிறிய நூலகத்தை கட்ட விரும்புகிறேன். அது அருகில் உள்ளவர்களும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மணமகள் பிரியாங்கா கூறியதாவது, எனக்கு வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் பிடிக்காது என்று என் குடும்பத்தினருக்கு நன்றாக தெரியும். என்னை புரிந்து கொண்ட கணவர் கிடைத்துள்ளார். எனக்கும் படிப்பதில் அதிக ஆர்வம் உள்ளது. அதனாலேயே எனது தந்தை இந்த புத்தகங்களை கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.