திருப்பூர், ஏப். 11 -பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கோவை நாடாளுமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்கு சேகரிப்புப் பணியில்ஈடுபட்டார். அவருக்கு கிராமப்புற மக்கள் உற்சாகமான வரவேற்பு கொடுத்துஆதரவு தெரிவித்தனர்.கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் பொங்கலூர் ஒன்றியம் இடம் பெற்றுள்ளது. வியாழக்கிழமை காலை இங்குள்ள வலையபாளையம் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்கு சேகரிப்புப் பயணம் தொடங்கியது. வாக்கு சேகரிப்புப் பயணக் குழுவினர்துத்தாரிபாளையம், கள்ளிப்பாளையம், நாதகவுண்டம்பாளையம், வடுகபாளையம், எலவந்தி, கேத்தனூர், மந்திரிபாளையம், வாவிபாளையம், கொசவம்பாளையம், பழனிக்கவுண்டம்பாளையம், சாலையூர், கெரடமுத்தூர், வடமலைபாளையம், புத்தரச்சல் கடை வீதி, கெங்கநாயக்கன்பாளையம், கொடுவாய் கடை வீதி, வெள்ளியம்பாளையம், கோட்டமேடு, செல்லப்புள்ளபாளையம், செம்மாக்கவுண்டன் புதூர், கொசவம்பாளையம், முதியாநெரிச்சல், கண்டியன்கோயில், பூசாரிபாளையம், மருதுரையான் வலசு, மீனாட்சி வலசு, தங்காய்புதூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்றனர். மதியம் பி.ஆண்டிபாளையம், நாச்சிபாளையம், ரங்கபாளையம், திருக்குமரன் நகர், மணியம்பாளையம், கரியாம்பாளையம், பெருந்தொழுவு, கைகாட்டி ஆகிய கிராமங்களுக்குச் சென்று வாக்கு சேகரித்தனர்.
கூட்டணி கட்சி தலைவர்கள்
இதில் வேட்பாளர் நடராஜனுடன் திமுக பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் அசோகன், காங்கிரஸ் வட்டாரச் செயலாளர் தியாகராஜன், மதிமுக ஒன்றியச் செயலாளர் மணி, இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சின்னச்சாமி, கொமதேக மேற்கு ஒன்றியச் செயலாளர் துரைசாமி, விடுதலைச் சிறுத்தைகள் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் சிவசாமி உள்பட கூட்டணிகட்சி செயல்வீரர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
ரூ.10 கோடிக்கு வளர்ச்சிப்பணி
இப்பகுதிகளில் கிராமப்புற மக்களிடம் வாக்குக் கேட்டுப் பேசிய வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், கடந்த முறை எம்.பி.யாக இருந்த ஐந்தாண்டு காலத்தில் பொங்கலூர் ஒன்றியத்தில் ரூ.10 கோடி அளவுக்குஎம்.பி., தொகுதி வளர்ச்சி நிதியைசெலவிட்டிருப்பதையும், தலித் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் சமுதாயக்கூடம் கட்டிக் கொடுத்ததையும் நினைவுபடுத்தினார். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வதன் மூலம் இப்பகுதி மக்களின் நம்பிக்கைக்கு உரிய முறையில் செயலாற்றுவேன் என்று உறுதியளித்தார். மேலும் பொங்கலூர் ஒன்றியத்தின் கிழக்குப் பகுதி கிராமங்களில் குடிநீர் பிரச்சனை கடுமையாக நிலவுவதால், இப்பகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
உங்களுக்கு எங்கள் ஓட்டு
பிற்பகல் அலகுமலையில் தொடங்கி சேமலைக்கவுண்டம்பாளையம், மசநல்லாம்பாளையம், குமாரபாளையம், தொங்குட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் பி.ஆர்.நடராஜன் வாக்கு சேகரித்தார். மாலையில் டி.ஆண்டிபாளையம், கே.ஆண்டிபாளையம், வேலம்பட்டி, புதுப்பாளையம், பொல்லிக்காளிபாளையம், நல்ல காளிபாளையம், உகாயனூர், என்.என்.புதூர், சக்திநகர், பொங்கலூர், காட்டூர், தொட்டம்பட்டி, கள்ளகிணர், நல்லாக்கவுண்டம்பாளையம், மாதப்பூர் ஆகிய பகுதிகளில் மக்களைச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் பி.ஆர்.நடராஜன் ஈடுபட்டார்.பொங்கலூர் ஒன்றிய கிராமங்களில் வேட்பாளர் நடராஜனுக்கு மக்கள்இன்முகத்துடன் வரவேற்பளித்தனர். குறிப்பாக தலித் மக்கள் குடியிருப்புகளில் பெருந்திரளானோர் கூடி நின்று அவருக்கு வரவேற்பளித்து உங்களுக்குத்தான் எங்கள் ஓட்டு என்று ஆதரவு தெரிவித்தனர்.