கோபி, மே 18-கோபி அருகே பயிரிடப்பட்டிருந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வெள்ளியன்று இரவு பெய்த கன மழை மற்றும் சூறாவளிக் காற்றில் சாய்ந்து சேதமடைந்துள்ளன.ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட காந்தி நகர்,கா.கணபதிபாளையம், இந்திரா நகர்மற்றும் வன்னி மரத்துக்காடு பகுதி விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். செவ்வாழை, கதளி, நேந்திரம், மொந்தன் உள்ளிட்ட இரக வாழை பல்லாயிரக்கணக்கில் சாகுபடி செய்திருந்தனர். இந்த வாழைகள் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்தன. மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாக்க டேப் கட்டியும், மூங்கில்களில்முட்டுக்கொடுத்தும் வாழை மரங்களைவிவசாயிகள் பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் வெள்ளியன்று இரவு காசிபாளையம் பகுதியில் பெய்த கனமழை மற்றும் சூறாவளிக்காற்றில் பத்தாயித்துக்கும் மேற்பட்ட வாழைமரங்கள் வேருடனும் சாய்ந்தும், பாதியுடனும் முறிந்தும் சேதமடைந்துள்ளன. தற்போது ஏற்பட்டு வரும் வறட்சிக்கு முன்பே வாழைகளை அறுவடை செய்து வங்கிகளில் வாங்கியுள்ள கடன்களை அடைத்து விடலாம் என விவசாயிகள் எண்ணியிருந்தனர். மேலும் குழந்தைகளுக்குப் பள்ளி, கல்லூரி கட்டணம் செலுத்த இந்த வாழைகளை நம்பியிருந்தனர். தற்போது வாழைகள் அனைத்தும் புயல் காற்றில் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வாழை சாகுபடி செய்திருந்தவிவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் இயற்கை சீற்றங்களினாலோ அல்லது வறட்சியினாலோ சாகுபடி செய்த பயிர்கள் சேதமடைந்து வருவதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தனிநபர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை அரசு அமுல்படுத்த வேண்டும் என்றும், சேதமடைந்துள்ள வாழைகளுக்கு உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் சூறாவளிக் காற்றினால் 50க்கும் மேற்பட்டதென்னை மரங்களும், ஆயிரத்திற்கும்மேற்பட்ட கரும்பு பயிர்களும் சேதமடைந்துள்ளதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.