tamilnadu

img

மேட்டுப்பாளையம் அருகே சூறாவளிக் காற்றால் வாழை மரங்கள் சேதம் அரசு வழங்கும் இழப்பீடு மிகக் குறைவு என விவசாயிகள் வேதனை

மே.பாளையம், மே 20-இயற்கை பேரிடர் மற்றும் வன உயிரனங்களால் ஏற்படும் சேதங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை மிக மிகக் குறைவு என்றும், இதனால் விவசாயத்தை தொடர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் வாழை விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் வாழை பயிரிடப்பட்டு வருகின்றன. இங்கு விளையும் நேந்திரன், கதளி, செவ்வாழை, ரோபஸ்டா போன்ற வாழை ரகங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் அவ்வப்போது வீசிய பலத்த சூறாவளி காற்றினால் இப்பகுதிகளில் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமாகின. ஓராண்டு பயிரான வாழைகள் அறுவடைக்கு தயாரான நிலையில் முற்றிலும் சாய்ந்து விட்டன.ஒரு ஏக்கரில் வாழை பயிரிட்டது முதல்அதனை அறுவடை செய்யும் வரை ரூ.2லட்சம் முதல் 2.50 லட்சம் வரை செலவாகிறது, ஆனால் சூறாவளி போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் நூறு சதவிகிதம் முழுமையாக சேதமடைகின்றன. இந்நிலையில் சேதமடைந்த வாழை ஒரு ஏக்கருக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் 5.7 சதவிகிதம் மட்டுமே இழப்பீடாக வழங்கப்படுகிறது. இதேபோல் வன விலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கு வனத்துறை சார்பில் 22.5 சதவிகிதமும் மட்டுமே இழப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது. இது மிக மிகக் குறைந்தபட்சஇழப்பீட்டுத் தொகையே என வேதனையோடு தெரிவிக்கும் வாழை விவசாயிகள், இயற்கை பேரிடரால் ஏற்படும் இழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையினை வைத்து சாய்ந்து போன வாழைகளை அப்புறப்படுத்தி நிலத்தை சீர் செய்யவே போதாது என்கின்றனர். மேலும் அடுத்தகட்ட விவசாயத்தைத் தொடர இயலாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். எனவே பொருளாதார சிக்கலில்சிக்கி தவிக்கும் விவசாயிகளை காப்பாற்ற இது போன்ற சேதங்களுக்கு 75 சதவிகிதம் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.